தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வரும் நடிகர்களில் மிக முக்கியமான நடிகர் பசுபதி. வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரமாகவும் நாயகனாகவும் நடித்து கச்சிதமாக திரைக்கு கொடுத்து முழுமையான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் சார்பாட்டா பரம்பரை, அசுரன் ஆகிய படங்கள் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. தற்போது பசுபதி இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே கதையின் நாயகனாக பசுபதி அவர்களின் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘தண்டட்டி’. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்தினை அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். இப்படத்தில் பசுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அமிராமி, தீபா, முகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்து சாமி ஒளிப்பதிவு செய்ய கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இறந்த மூதாட்டி அணிந்த தண்டட்டி காணமல் போக அதை கண்டு பிடிக்கும் வேலையாக கான்ஸ்டேபிள் பசுபதி ஊருக்குள் வருகிறார். அவருக்கு என்ன நேர்ந்ததை பேசுகிறது தண்டட்டி திரைப்படம். இந்த திரைப்படம் குறித்த பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று கவனத்தை ஈர்த்தது. இப்படம் திரையரங்குகளில் வருண் ஜூன் மாதம் 23 ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் ஜேஎம்கே பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் இயக்குனர் சி வேல்மணி இயக்கத்தில் உருவான அண்டாவ காணோம் படக்குழுவினர் தண்டட்டி படத்தின் கதையும் அண்டாவ காணோம் படத்தின் கதையும் ஒரே சார்பில் உள்ளதால் தண்டட்டி படத்தை தடை செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர் பதிவு செய்த கோரிக்கையில், “ஜே.எம்.கே. பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பின் மூலம் 'அண்டாவ காணோம்' என்ற திரைப்படத்தை 2017-ம் தயாரித்து, திரைப்படத் தணிக்கையும் பெற்றுள்ளேன். இந்த திரைப்படத்தை வெளியிட முயற்சித்தபோது, சில காரணங்களால் தடை பட்டது.

இந்த சூழலில் தற்போது 'அண்டாவ காணோம்' படத்தை வெளியிட தயாராகி வருகிறேன். இதற்கிடையே எனது இந்த படமும், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான 'தண்டட்டி' திரைப்படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாக தகவல்கள் வெளியிருக்கிறது. இந்த 'தண்டட்டி' திரைப்படத்தை பார்த்து, என்னுடைய படத்தின் கதையும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் 'தண்டட்டி' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் குமார். இந்த விவகாரம் தற்போது தமிழ் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.