ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் விநாயகன் கேரளாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மலையாள சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விநாயகன் கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து திரை உலகில் நடிகராக வலம் வருகிறார். தனக்கென தனி பாணியில் வித்தியாசமான உடல் மொழியில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் விநாயகன் மலையாள சினிமாவில் இதுவரை ஒரு கேரள மாநில விருது 2 பிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை தனது நடிப்பிற்காக பெற்றிருக்கிறார். தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமடைந்த விநாயகன் தொடர்ந்து சிலம்பரசனின் சிலம்பாட்டம், காளை உள்ளிட்ட படங்களிலும், தனுஷின் மரியான் படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் பிளாக் பஸ்டரான ஜெயிலர் படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த இந்த ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் எனும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விநாயகன் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாக்கி இருக்கும் அதிரடி ஆக்சன் படமான துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் விநாயகர் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகிற நவம்பர் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனிடையே நடிகர் விநாயகன் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் விநாயகன் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். எர்ணாகுளத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் விநாயகன் தகராறில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் மரியாதையில்லாமல் பேசியதாலும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. நேற்று அக்டோபர் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடிகர் விநாயகன் தனது குடும்ப பிரச்சினை குறித்து பேசுவதற்காக போலீசாரை வீட்டிற்கு வரவழைத்து இருப்பதாக தெரிகிறது. அப்படி வந்த போலீஸ்காரர்களிடம் நடிகர் விநாயகன் மரியாதை இன்றி பேசி இருப்பதாகவும் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விநாயகனின் மனைவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக நடிகர் விநாயகனை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பு நடிகர் விநாயகர் மது அருந்திவிட்டு சென்றிருப்பதாகவும் அங்கே போலீஸ்காரர்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் போலீஸ்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் காவல் நிலையத்திலும் போலீஸ்காரர்களை மரியாதை இன்றி கோபமாக நடிகர் விநாயகன் பேசி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. அது குறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வந்தன. நடிகர் விநாயகனின் மனைவி மட்டுமல்லாது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மற்ற சிலரும் விநாயகன் மீது புகார் அளித்திருப்பதாகவும் அதற்காகவே விநாயகனை கைது செய்திருப்பதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட விநாயகர் பின்னர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.