சர்வதேச அளவில் பாராட்டுகளையும் வசூலையும் விருதுகளையும் குவித்து வரும் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம். கடந்த ஆண்டு வெளிவந்து உலகளவில் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது. சமீபத்தில் உலகின் பொழுதுபோக்கிற்கான உயரிய விருதாக கருதக் கூடிய கோல்டன் குலோப் விருதை சிறந்த பாடல் பிரிவில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு.. நாட்டு..’ பாடல் வென்றது.

இதனையடுத்து ஒட்டுமொத்தத்தை உலக சினிமா ரசிகர்களும் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் மீது கவனம் செலுத்தினர். படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்த போதிலும் விருதுகளும் வசூலும் குறையாமல் உயர்ந்தபடியே உள்ளது. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கிரிட்டிக் சாய்ஸ் விருது சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான விருதையும் சிறந்த பாடலுக்கான விருதையும் வென்றது. இந்நிகழ்வில் உலக புகழ்பெற்ற டைட்டானிக், டெர்மினேட்டர், அவதார் படங்களை இயக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் அவர்களை படக்குழு சந்திக்க நேர்ந்தது.

படக்குழுவுடன் பேசிய ஜேம்ஸ் கேமரூன் ஆர் ஆர் ஆர் படத்தை இரண்டு முறை பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த சிறிய தொகுப்பு கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது ராஜமௌலி மற்றும் ஜேம்ஸ் கேமரூன்க்கு இடையே நிகழ்ந்த முழு உரையாடல் படக்குழு பதிவிட்டுள்ளது. இதனையடுத்து இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் “டெர்மினேட்டர் முதல் டைட்டானிக் வரை உங்களது எல்லாப் படங்கள் மிகவும் பிடிக்கும்" என ராஜமௌலி ஜேம்ஸ் கேமரூனிடம் கூறினார்.

அதன் பின் ஜேம்ஸ் கேமரூன் “உங்களது படங்களின் கதாபாத்திரங்களை பார்க்கும்போது உணர்ச்சி மிகுந்ததாக உள்ளது. நெருப்பு, நீர், கதை என்று படத்தை நேர்த்தியாக வடிவமைத்துள்ளீர்கள்.. கதைக்கு பின் கதை, அந்த கதையில் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கொஞ்சமாக ரிவீல் செய்கிறீர்கள். கதையில் கதாநாயகன் என்ன செய்கிறான்? அதில் நிகழும் திருப்புமுனைகள் மற்றும் நண்பர்களுக்குள்ளான அந்த பந்தம் எல்லாம் நன்றாக இருந்தது. எனக்கு நீங்கள் கையாண்ட விதங்கள் அதன் பின்னணி எல்லாமே பிடித்திருந்தது. முழுக்க முழுக்க படம் எனக்கு பிடித்ததாய் இருந்தது” என கேம்ரூன் கூறினார். இதற்கு ராஜமௌலி இந்த விருதை விடவும் இந்த வார்த்தைகள் மிகவும் பெரியது எனக் கூறினார்.

பின் படம் எடுக்க எவ்வளவு நாள் ஆனது என கேம்ரூன் கேட்க 320 நாட்கள் ஆனதாக ராஜமௌலி தெரிவித்தார். அதற்கு அவர் “கேட்கவே ஆச்சர்யத்துடன் வேடிக்கையாக உள்ளது" என்றார். மேலும் நீங்கள் தான் தற்போது உலகத்திலே டாப் என்றார். நீங்கள் உங்கள் மக்களை பெருமை பட வைத்துள்ளீர்கள் என்றார். இறுதியாக ராஜமௌளியிடம் "ஹாலிவுட்டில் படம் எடுக்க வேண்டுமானால் சொல்லுங்கள் நாம் பேசலாம்" என கேமரூன் கூறியுள்ளார். மேலும் பின் படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியிடம் “பார்வையாளர்களின் உணர்வுகளுக்கு உறுதுணையாய் இருக்குமளவு உங்கள் பின்னணி இசை இருந்தது. அந்த காட்சியை மேலும் உயர்த்த இது சிறப்பாகவே வேலை செய்தது . நீங்கள் வித்யாசமான முறையில் இசையை கையாண்டுள்ளீர்கள்" என்றார்.

இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாவது மட்டுமல்லாமல் படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் கொடுத்து வருகிறது. ஆர் ஆர் ஆர் திரைப்படம் பிரிட்டிஷ் எதிர்த்து இந்தியாவின் சுதந்திர போராட்ட காலத்தின் அடிப்படையில் இரண்டு தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து அலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஒலிவியா மோரிஸ், ஷ்ரியா சரண் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.