திருமணத்துக்கு முன் உறவு தப்பு என்ற இந்தோனேசிய அரசின் புதிய சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் சில புதிய சட்ட மசோதாக்கள் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பாலியல் தொடர்பான குற்றவியல் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடைபெறாமல் நிலுவையில் உள்ளது.

இந்த சட்டத்தின்படி, திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவில் ஈடுபட்டால், அது குற்றம் என்று கருதும் வகையில் புதிய சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இவற்றுடன் தன்பாலின உறவு, திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு, ஆணும் - பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்வது ஆகியவையும் குற்றங்களாகக் கருதும் வகையில் அந்த சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

இதனிடையே, இந்த புதிய சட்டத் திருத்தத்திற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். குறிப்பாக,
இந்த சட்டத்தைத் எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டும் வந்தனர். இந்நிலையில், இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடத்தாமல், வேண்டும் என்றே அரசு காலம் தாழ்த்துவதாகக் கூறி, அந்நாட்டு மக்கள் நேற்று வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் - பெண்கள் எனப் பல ஆயிரம் பேர் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து விரைந்து வந்த அந்நாட்டு போலீசார், போராட்டக்காரர்களைக் கலைந்துபோகுமாறு வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்துபோக மறுத்ததால்,அவர்கள் மீது புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீச்சி அடித்தனர். இதனால், பலரும் ஓட்டம் பிடித்தனர். இதில், சுமார் 40 பேர் வரை காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. போராட்டம் காரணமாக, அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.