இசை பிரியர்களுக்கு இசைஞானி இளையராஜாவின் இசை, அவர்களின் வாழ்க்கையின் ஓர் அங்கம். அப்படி இசைஞானியின் இசையில் வெளிவந்த எக்கச்சக்கமான பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் நம் மனதை வருடி கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் மிகவும் குறிப்பிடப்படும் பாடல்களில் ஒன்றாக ரசிகர்களின் மனதில் ரீங்காரமிட்டு வரும் பாடல் இளையநிலா பொழிகிறதே. நடிகர் மோகன் கதாநாயகனாக நடித்த பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடி வெளிவந்த இளையநிலா பொழிகிறதே பாடல் காலங்களை கடந்தும் பல கோடி நெஞ்சங்களை கொள்ளையடித்து வருகிறது. இந்தப் பாடலின் இப்படிப்பட்ட மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது இசைஞானியின் இசையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரலும் தான். அது மட்டுமல்லாது மேலும் ஒரு கூடுதல் பலமாக அமைந்தது இசை கலைஞர் சந்திரசேகர் அவர்களின் கிட்டார் இசை.

புகழ்மிக்க கிட்டார் இசை கலைஞராக இசைஞானி இளையராஜா உடன் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு பணியாற்றிய சந்திரசேகர் அவர்கள், அதற்கு முன்பே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களாக திகழ்ந்த கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் சங்கர் - கணேஷ், இசையமைப்பாளர் திவாகர் ஆகியோரிடம் கிட்டாரிஸ்ட்டாக சந்திரசேகர் பணியாற்றி இருக்கிறார். மேலும் இவரது சகோதரரும் மறைந்த டிரம்ஸ் இசைக்கலைஞருமான புருஷோத்தமன் அவர்களும் முக்கிய இசைக் கலைஞராக பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் “பாடி வா தென்றலே” & “பாடும் வானம்பாடி” உள்ளிட்ட பல பாடல்களுக்கு சந்திரசேகர் அவர்கள் கிட்டார் இசை கலைஞராக பணியாற்றியுள்ளார்.

முன்னதாக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்த வெளிவந்த மூன்று முடிச்சு திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் வந்த “வசந்த கால நதிகளிலே” எனும் பாடலில் மௌத் ஆர்கன் வாசித்தவரும் சந்திரசேகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இசைக் கலைஞர் சந்திரசேகர் அவர்கள் நேற்று மார்ச் 8ம் தேதி மாலை திடீரென காலமானார். அவர் வயது 79. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு இவரது சகோதரரான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் புருஷோத்தமன் அவர்கள் உயிரிழந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கிட்டார் இசைக் கலைஞர் சந்திரசேகர் அவர்கள் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ்மிக்க கிட்டார் இசை கலைஞராக தமிழ் மக்களின் மனதில் ஒலிக்கும் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு கிட்டார் வாசித்த சந்திரசேகர் அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் கிட்டார் இசைக் கலைஞர் சந்திரசேகர் அவர்களின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் இசையமைப்பாளர்களும் ரசிகர்களும் தங்களது இரங்ககலை தெரிவித்து வருகின்றனர்.