நம் நாட்டில் பாலியல் அத்துமீறல், குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கின்றது. குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. இந்த குழந்தைகள் மீதான பாலியல் குற்ற செயல்கள் அதிகரிக்க பெரும்பாலான காரணம் சரியான விழிப்புணர்வு குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் இல்லாமல் இருப்பது தான். ஒரு பாலியல் குற்ற செயல் அந்த நிலையில் மட்டுமல்லாமல் அந்த குழந்தையை உளவியல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாக்கும். அதனாலே பெண் குழந்தைகள் ஏன் ஆண் குழந்தைகளையும் நம் சமூகத்தில் சரியான விழிப்புணர்வு வழிகாட்டுதலில் நாம் வளர்க்க வேண்டும். இந்த சமூக கருத்தை கருத்தில் கொண்டு இசைஞானி இளையராஜா இசையில் பா. விஜய் வரிகளில் ‘யார் இந்த பேய்கள்’ என்ற விழிப்புணர்வு பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இந்த பாடலை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.கிருத்திகா தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வருபவர் வணக்கம் சென்னை, காளி, பேப்பர் ராக்கெட் போன்ற படங்களை எடுத்து கவனம் பெற்றவர். மேலும் விழிப்புணர்விற்காக குறும்படங்களையும் இயக்கியவர்.

முன்னதாக பாலினம் குறித்த விழிப்புணர்வு தரும் நோக்கத்தில் ‘சதையை மீறி என்று சந்தோஷ் நாராயணன் இசையில் மியூசிக் வீடியோவை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் உள்ள மிகப்பெரிய ஆளுமைகள் இணைந்து குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை தரும் ‘யார் இந்த பேய்கள் எனும் மியூசிக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களையும். அதை மீறி குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் உள்ள இடைவெளி, நம்பகத்தன்மை, குழந்தையிடம் பெற்றோர் மனம் விட்டு பேசுவது எல்லாம் இந்த பாடல் வலியுறுத்துகிறது. குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட மக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டே இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் பெரியோர்களிடம் சொல்ல முற்படும் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த துயரத்திற்கு ஆளாகி விடுவார் என்பதை வலியுறுத்தும் யார் இந்த பேய்கள் மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளது சோனி மியூசிக். மேலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என்ற போஸ்டருடன் இணையத்தில் வெளியிட்டுள்ளனர் குழுவினர்.

தற்போது அரசு அதிகாரிகள், ரசிகர்கள், திரைப்பிரபலங்களால் யார் இந்த பேய்கள் என்ற விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாக்கபட்டு வருகிறது.