தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் இன்றையமையாத இசையமைப்பாளராகவும் தொடர்ச்சியாக ரசிகர்களுக்கு எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். படத்திற்கு ஒரு பாடல் இரண்டு பாடல் ஹிட்டெல்லாம் கிடையாது. ஒவ்வொரு படத்திலும் அனைத்து பாடல்களும் ஹிட் கொடுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்குனராக அறிமுகமான மின்னலே திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அடுத்தடுத்து மஜ்னு, 12B, சாமுராய், லேசா லேசா, சாமி, கோவில், காக்க காக்க, செல்லமே, அருள், உள்ளம் கேட்குமே, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், உன்னாலே உன்னாலே, பீமா, தாம் தூம், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், எங்கேயும் காதல், கோ, ஏழாம் அறிவு, நண்பன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மாற்றான், துப்பாக்கி, என்னை அறிந்தால், அனேகன், இருமுகன், ஸ்பைடர், காப்பான் என தனது இசை மழையால் ரசிகர்களை மகிழ வைத்தவர்.

கடைசியாக தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக களமிறங்கிய தி லெஜண்ட் திரைப்படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் 30 ஆவது திரைப்படமாக தயாராக இருக்கும் புதிய JR30 படத்திற்கு இசையமைக்க உள்ளார். முன்னதாக கடந்த 1999 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், சுமாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நமது கலாட்டா ரிட்ஸ் சேனலில் பிரத்யேக பேட்டி கொடுத்த சுமா ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இருந்த முக்கிய தருணங்கள் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் அவரது பாடல்கள் மூலம் பதிலளிக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொண்டதால் அவற்றுக்கு பாடல்கள் மூலமே சுமா ஜெயராஜ் அசத்தலாக பதில் அளித்தார். அதில் முதலாவதாக, நாம் இப்போது 1999ம் ஆண்டிற்கு டைம் டிராவல் செய்து பின்னோக்கி செல்கிறோம் அக்டோபர் மாதம் மின்னலே ஆல்பம் வெளியாகிறது. நீங்கள் கேட்ட முதல் பாடல் எது? என கேட்டபோது, “கேட்ட முதல் பாடல் என்றால்... பலரும் யூகிப்பது வசீகரா பாடலாக தான் இருக்கும் என, ஆனால் அந்தப் பாடலை நான் முதலில் கேட்கவில்லை... என சொல்லிவிட்டு “இவன் யாரோ இவன் யாரோ” என்ற பாடலை மிக அழகாக பாடினார். தொடர்ந்து அடுத்ததாக ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுடன் உங்களுடைய முதல் சந்திப்பு எப்படி இருந்தது? என கேட்டபோது, “பார்த்த முதல் நாளே” பாடலை மிகவும் ரம்யமாக பாடினார். தனது கணவரும் தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர்களில் ஒருவருமான ஹாரிஸ் ஜெயராஜ் குறித்த கேள்விகளுக்கு பாடி பதிலளித்த சுமா ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் அட்டகாசமான அந்த சிறப்பு பேட்டி இதோ…