பிரதமருக்கு கடிதம் எழுதியது குற்றம் என்று கூறிமணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் கடந்த பல மாதங்களாகச் சிறுபான்மையினருக்கு எதிராகத் தாக்குதல் தொடர்வதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

மேலும், தாக்குதலுக்கு ஆளாகும் சிறுபான்மையினர் குறித்துத் தொடர்ந்து வீடியோக்களும் வெளியாகி வந்தன.
இதில், ஒருவரை 10க்கும் மேற்பட்ட சில கும்பல் சேர்ந்து தாக்குதல் நடத்துவதாக, தொடர்ந்து பல வீடியோக்கள் வெளியானது.

இதனால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதினர்.

அந்த கடிதத்தில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவது அதிகரித்துப்போகவும், அரசுக்கு எதிராகக் கருத்து கூறுபவர்களை தேசவிரோத, நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் தாக்குதல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் தாக்குதலைக் குறைக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், பீகாரின் முசாபர்பூரில் உள்ள காவல் நிலையத்தில், மணி ரத்னம், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்ளூர் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர், 49 பேருக்கு எதிராக முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதில், பிரதமர் மோடியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். அதன்படி, 49 முக்கிய பிரபலங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய நீதிபதி சூர்யகாந்த் திவாரி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் தேசத்துரோக வழக்கு, மத உணர்வுகளைப் புண்படுத்துதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மணி ரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், திரையுலக பிரபலங்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.