புகழ்பெற்ற இந்தி தொடரான ‘ஃபேமிலி மேன்’ தொடரையடுத்து அந்த தொடரின் இயக்குனர்களான இயக்குனர் ராஜ் மற்றும் டீகே இயக்கும் மற்றுமொரு தொடர் ஃபர்ஸி. இந்த தொடரில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, கே.கே.மேனன் , ரெஜினா கேசேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் அமேசான் பிரைம் ல் வரும் பிப்ரவரி 10ம் தேதி வெளிவரவிருக்கின்றன. எட்டு எபிசோடுகளை கொண்டுள்ள இந்த தொடர் ஒரு கிரைம் திர்ல்லர் கதைகளத்தில் உருவாகியுள்ளது.

சட்ட விரோதமாக ரூபாய் நோட்டுகளை அச்சிடும் வாலிபராய் வரும் ஷாகித் கபூர் மற்றும் குழுவினரை பிடிக்க மிரட்டலான அதிகாரியாக வருகிறார் விஜய் சேதுபதி. தனிக் குழு அமைத்து சட்ட விரோத செயலை செய்யும் குழுவை பிடிக்க super cop ஆக விஜய் சேதுபதி தொடரில் இருக்கிறார். திருடன் போலீஸ் திரைக்கதையை கொண்டுள்ள இந்த தொடரின் டிரைலர் முன்னதாக வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக விஜய் சேதுபதி ரசிகர்களிடமும் தமிழ் திரையுலகிலும் இந்த தொடர் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அமேசான் பிரைம் மற்றும் அதன் தொடரான ஃபர்ஸி குழுவினர் சார்பில் வாழ்த்துகளுடனான வீடியோவை பகிர்ந்துள்ளது.

அசத்தலான சண்டை காட்சிகளும் விசாரணையில் விஜய் சேதுபதி பேசும் வசனங்களும் மற்றும் தொடரில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என்று அறிமுகப்படுத்தியும் மேலும் தொடரில் சில காட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது அந்த வீடியோ.

வழக்கமான நய்யண்டியுடன் வில்லத்தனமாய் மிரட்டும் விஜய் சேதுபதி ரசிகர்களால் கவரப்பட்டு வருகிறார். மேலும் அமேசான் பிரைம் வெளியிட்ட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தற்போது நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு அனைத்து தரப்பு மக்களிடம் அவரது பிறந்தநாளையடுத்து வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் ஃபர்ஸி தொடரில் கதாநாயகன் ஷாகித் கபூருக்கு தமிழில் குரல் கொடுத்துள்ளார் நடிகர் ஜீவா என்பது கூடுதல் தகவல்