இந்திய சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாஸில் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது தான்.

முன்னதாக மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 2வது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்துள்ள இந்த தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், ஆக்சன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வருடங்களில் நடிப்பதாக தெரிகிறது

மேலும் மலையாள நடிகர் ப்ரித்விராஜ், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி உள்ளிட்டோரும் தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. முன்னதாக தளபதி 67 படத்தின் அறிவிப்பு வீடியோ வருகிற ஜனவரி 26 தேதி வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் ஃபகத் பாஸில் அவர்களிடம், “விஜயின் தளபதி 67 படம் பற்றி அப்டேட் என்ன? அதில் நீங்கள் நடிக்கிறீர்களா? அது LCUன் கீழ் வருகிறதா?” என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டது, இது குறித்து “ஆமாம்” என பதிலளித்தார். தொடர்ந்து “உங்களுடைய கதாபாத்திரம் தளபதி விஜய் உடன் இருக்குமா?” என கேட்டபோது, “இல்லை ஏற்கனவே சொன்னது போல (LCU) யுனிவர்சில் வருவதனால் இருக்கலாம்” என பதிலளித்தார். தொடர்ந்து “அமர் கதாபாத்திரத்திற்கு மட்டும் என தனி படம் வருவதாக சொல்கிறார்களே?” என கேட்டபோது, “அது பற்றி இப்போதே சொல்ல முடியாது அவர்களை அதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக சொல்வார்கள்” என பதிலளித்துள்ளார்.

ஃபகத் பாஸிலின் இந்த பதிலால் தளபதி 67 திரைப்படம் LCUல் கட்டாயமாக இடம் பெறவுள்ளது என ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். எது எப்படியோ இந்த அனைத்து கேள்விகளுக்கும் அடுத்த ஓரிரு தினங்களில் வரும் அறிவிப்பும் அடுத்தடுத்து வரும் அறிவிப்புகளும் பதில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.