இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளியாகி இன்றும் திரையரங்குகளில் மக்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவின் பெருமை மிக்க படைப்பாக இருந்து வருகிறது. இப்படம் உருவான விதம் மற்றும் படப்பிடிப்பு செயல்பாடு குறித்து பிரபல தயாரிப்பாளர் மற்றும் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் பொன்னியின் செல்வன் படம் உருவாக எடுத்து கொண்ட வருடங்கள் குறித்து பேசுகையில்.

“1990ல் கல்கி பத்திரிக்கையில் கமல் சார் நேர்காணல் வந்தது. அதில் பொன்னியின் செல்வன் பண்ண போறோம். அதை இயக்க இயக்குனர் மணிரத்னம் தான் தகுதியானவர்.. னு அது படிச்ச பின்புதான் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி படித்தேன். பின் 1998 ல் மணி சாரிடம் வேலைக்கு சேர்ந்த போது பொன்னியின் செல்வன் படம் பற்றி கேட்டேன். தெரில நடக்குமா னு சொன்னார். 2003 ல ஒரு முயற்சி செய்தோம். திரைக்கதை எழுதி நடிகர்களாம் தேர்ந்தெடுத்து அப்படியே விட்டோம். 2007 ல கமல்ஹாசன் அவரிடம் வேலைக்கு சேரும் போது அவரிடமும் பொன்னியின் செல்வன் குறித்து கேட்டேன்.. அவர் முடியாது அது திரைக்கதை எழுத கஷ்டம் அதனால் நான் அதை விட்டுவிட்டேன் என்றார்.. 2010 ல மிகப்பெரிய முயற்சி செய்தோம். அதுதான் பொன்னியின் செல்வன் படத்திற்கு நெருக்கமாக கொண்டுவந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் தான் கதை எழுதுறாருனு முடிவு பண்ணோம். 6 நாள் முழுவதும் காவேரி நதிக்கரை பகுதிகளில் கூட்டி சென்றார்.

அது ரொம்ப சிறப்பான பயணம். பழையாறை, வீராணம், பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் என்று காவேரி கடலில் கலக்கும் இடம் வரைக்கும் போனோம். அந்த 6 நாளைக்கும் சோழ வரலாறு, பொன்னியின் செல்வன் பற்றி தான் பேசுனோம்.அப்பவும் அந்த படம் துவங்கறதுக்கு முன்னாடியே கை விட்டுட்டோம். கிட்டத்தட்ட 30 வருஷம் இந்ந படத்தை எடுக்க முயற்சி செய்றார். அதுக்கும் முன்னாடி கூட இருக்கலாம்.. 2018 ல் செக்க சிவந்த வானம் படம் முடிந்த பின் சார் வேறு ஒரு கதை எழுத கொடைக்கானல் போயிருந்தார். திரும்பி வந்து 'அடுத்து பொன்னியின் செல்வன்' பன்றோம் என்றார். நான் எதுக்கு சார் னு கேட்டிருப்பேன். ஆனா அவர் பண்ணலாமா னா கேட்கல.. பண்றோம் னு சொல்லிட்டார்.. அது சவாலா இருந்தது. பேசி பேசியே எடுக்கப்பட்ட முடிவு இந்த படத்தை 2 பாகங்களா கொண்டு வரனும் னு..3 மணி நேரத்தில் கண்டிப்பா இந்த படத்தை கொண்டு வர முடியவில்லை.. அது தான் இந்த படத்தோட ஆரம்பமா இருந்தது.” என்றார் தயாரிப்பாளர் சிவா ஆனந்த்.

மேலும் பொன்னியின் செல்வன் நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..