இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். தனது முதல் படமான பொல்லாதவன் தொடங்கி சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் வரை தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வரவேற்பை பெற்று இன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதனிடையே இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பு என நல்ல நல்ல படங்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் கிரைம் திரில்லர் கதைகளத்தில் இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் விடுதலை. RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்க இரண்டு பாகங்களாக உருவான விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31 ம் தேதி வெளியாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று இன்று இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்க இவருடன் கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் முக்கிய வேடங்களில் கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், பிரகாஷ் ராஜ், இளவரசு, பவானி ஸ்ரீ, சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் பாடலும் படத்தின் முன்னோட்டமும் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டி பின் படம் வெளியாகி தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

ரசிகர்களின் ஆரவார வரவேற்பில் கொண்டாட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படத்தினை நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் தெலுங்கு மொழியில் வெளியிடவுள்ளார். இப்படத்திற்கு ‘விடுதல’ என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்ட விடுதல படத்தின் டிரைலர் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 15 ம் தேதி தெலுங்கானா மற்றும் ஆந்திர பகுதிகளில் வெளியாகவுள்ளது.

இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெற்றிமாறன் அவர்களிடம் அல்லு அர்ஜுன் அவர்களை வைத்து படம் இயக்க எண்ணம் உள்ளதா என்ற கேள்வியை பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்க அதற்கு வெற்றிமாறன்,

“ஆடுகளம் படம் முடித்த பின் நான் அல்லு அர்ஜுன் அவர்களை சந்தித்தேன். அவர் என்னை சென்னை வந்து பார்த்தும் இருக்கிறார். அப்போது அவர் என்னை சந்திக்கும் போது 'சார் நான் தமிழில் நடிக்க விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு ஒரு கதை சொல்லுங்கள்' என்றார். நான் அவருக்கு வடசென்னை கதையில் ஒரு அழுத்தமான முக்கயமான கதாபாத்திரம் குறித்து அவருக்கு விளக்கினேன். இன்று அதை நான் மாற்றி அமைத்து விட்டேன். அன்று என் எண்ணவோட்டத்தில் இருந்த வடசென்னை கதையில் ஒரு கதாபாத்திரத்திரம் அது. அந்த கதாபாத்திரம் குறித்து அவரிடம் பேசினேன். அது ஒரு நல்ல கதாபாத்திரம். மீண்டும் நான் ஹைதராபாத் வந்து அல்லு அரவிந்த் அவர்களின் அலுவலகம் சென்று பேசியுள்ளேன்." என்றார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வடசென்னை’ இரண்டு பாகங்களாக உருவான வடசென்னை படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தற்போது இரண்டாம் பாகத்திற்கான காத்திருப்பில் ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்திற்கு பின் வடசென்னை 2 உருவாகும் என்று வெற்றிமாறன் ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.