தமிழில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகம். ஆர் எஸ் இன்போடைன்மன்ட் தயாரிப்பில் அட்டகாசமான க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்க இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருப்பார். மேலும் படத்தில் இயக்குனர் கௌதம் மேனன்., ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.

விடுதலை திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல ஒப்பனிங்கை பெற்று இன்றும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகின்றது. படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் அவர்கள் விடுதலை திரைபடத்தை தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு அதன்படி ‘விடுத்தல’என்ற பெயரில் தெலுங்கானா மற்றும் ஆந்திர பகுதிகளில் வெளியிட்டார். கடந்த ஏப்ரல் 16 ம் தேதி வெளியான விடுதல திரைப்படம் தெலுங்கு ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டு கொண்டாடப் பட்டு வருகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர், ரசிகர்கள், மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இயக்குனர் வெற்றிமாறன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"விடுதலை படத்தை பொறுத்தவரை இது போன்ற கதைக்கான எண்ணத்தை எளிதாக கொண்டு வந்துவிட முடியும். ஆனால் இதில் சவால் என்னவென்றால் இது போன்ற கதைக்கு முதலீடு செலுத்த முன்வருவதுதான்.. அதனால் நான் எனது தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர் படத்தை முடிக்க எனக்கு கொடுத்த அனைத்து ஆதரவிற்கும்.. அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கும்.. விடுதலை படம் தமிழில் இங்கு வெளியான போது அல்லு அரவிந்த் சார் மக்களுடன் மக்களாக படத்தை பார்த்துள்ளார். பின் என்னை அதிகாலை 2 மணிக்கு தொலைபேசியில் அழைத்து பேசினார். அவருக்கு படம் ரொம்ப பிடித்ததாகவும் அதை தெலுங்கு மொழியில் டப் செய்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த ஆதரவிற்கும் அவர் படத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் அதில் போட்ட உழைப்பிற்கும் பான் அவருக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும். அதே போல் பத்திரிக்கையாளர்கள் படத்திற்கு செய்த விஷயமும் அளப்பறியது. அந்த படத்தை பற்றி பேசி, எழுதியுள்ளீர்கள்.‌படத்தில் உள்ள குறைகளை தவிர்த்து அந்த படத்தில் உள்ள நல்ல விஷயங்களை தட்டி கொடுத்து பேசியுள்ளீர்கள். அதற்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும்.

கடைசியாக, தெலுங்கு மொழி டப் விடுதலை பட்டத்திற்கு மிகப்பெரிய நன்றியை தெலுங்கு ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் படம் பார்ப்பது மட்டுமல்லாமல் அந்த படத்தை கொண்டாடியுள்ளீர்கள். படம் எப்படி இருந்ததோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டதற்கு, நானும் எனது குழுவினரும் உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார் இயக்குனர் வெற்றி மாறன்.