தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குனர் வெங்கட்பிரபு சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, சென்னை 600028 ||, மாநாடு மற்றும் மன்மத லீலை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் லைவ் டெலிகாஸ்ட் வெப்சிரிஸையும் குட்டி ஸ்டோரி எனும் ஆன்தாலஜி படத்தில் லோகம் எனும் எபிசோடும் இயக்கியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் இயக்குனராக தனது திரைப்பயணத்தில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இயக்குனர் வெங்கட்பிரபு இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

இந்த நாள் ஓர் இனிய நாளாக இருப்பதற்குக் காரணம் எஸ்.பி.பி சாரின் ஆசீர்வாதமும் என் நண்பன் சரணின் நம்பிக்கையும்தான். 15 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் அவர்கள் 'சென்னை 600028' மூலம் என் திரைப்பயணத்தைத் தொடங்கிவைத்தார்கள். அதனால்தான் வெங்கட் பிரபு என்கிற நானும் சினிமா எனும் பெருங்கடலில் இன்று பதினைந்தாம் ஆண்டை நிறைவு செய்கிறேன்.
நான் சினிமாவிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன். பிரபலமான இயக்குனர்களிடம் இருந்து சினிமாவைக் கற்றுக்கொள்ளும் சூழல் எனக்கு அமையவில்லை. ஆனாலும், புதுப்புது முயற்சிகள் செய்வதில் எனக்கிருக்கும் ஆர்வம் ஒருபோதும் குறைவதில்லை. அந்த முயற்சிகளில் சில படங்கள் வெற்றி பெற்றன; சில படங்கள் எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தன.
எது எப்படி இருந்தாலும், நான்கைந்து வருடங்கள் இடைவெளி இருந்தாலும்கூட, வெங்கட்பிரபு என்கிற ஒரு மனிதனை ஒருபோதும் மறந்துவிடாமல், நான் ஒரு படத்தோடு வரும்போதெல்லாம் ரசிகர்களாகிய நீங்கள் மனதார வரவேற்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
என் அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை எதிர்நோக்கும் இந்த வேளையில் என் சினிமா பயணத்தை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.
என்னோடு என்றும் துணை நிற்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நட்சத்திரங்கள், நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி!

என தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் அந்த அறிக்கை இதோ…

Thank q!! Thank q!! Thank q!! 🙏🏽🙏🏽🙏🏽 love you all❤️❤️❤️❤️❤️#15YearsofVP #15YearsofVenkatPrabhu pic.twitter.com/XSWx0gZKTT

— venkat prabhu (@vp_offl) April 27, 2022