தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மிகப்பெரிய கவனம் பெற்ற இயக்குனர்களில் ஒருவர் தியாகராஜன் குமாராஜா. இவரது முந்தைய படங்களான ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களாகும். அந்த வகையில் அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்த நிலையில் தற்போது ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற ஆந்தாலாஜி அவரது அடுத்த படைப்பாக அமைந்துள்ளது.

உலகளவில் பிரபலமான மாடர்ன் லவ் ஆந்தாலாஜி பிரிவில் சென்னை சார்ந்த கதைக்களத்தில் தியாகராஜன் குமாராஜா மேற்பார்வையில் உருவான இந்த தொடரில் தியாகராஜன் குமாராஜா உட்பட பாரதி ராஜா, ராஜூ முருகன், பாலாஜி சக்திவேல், கிருஷ்ணா குமார், அக்ஷய்சுந்தர் ஆகியோர் இயக்கத்தில் காதல் கதையை மையமாக கொண்டு மொத்தம் 6 எபிசோடுகள் உருவாகியுள்ளது. இந்த ஆந்தாலாஜி இணைய தொடர் வரும் மே 18 ம் தேதி பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. அசோக் செல்வன், ரம்யா நம்பீசன், ரித்து வர்மா, விஜய லக்ஷ்மி, கிஷோர் போன்ற பிரபல முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவான இந்த ஆந்தாலாஜி தொடருக்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் மாடர்ன் லவ் சென்னை என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்த ஆந்தாலாஜி தொடர் குறித்து இயக்குனரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் குமாராஜா பேசுகையில்.

“இந்த படம் எனக்கு அழுத்தமான பயணமாக இருந்தது. முதலில் ஆரம்பிக்கும்போது பண்ணிடலாம் என்று நினைத்தேன்.‌8 மாதத்தில் முடிக்க வேண்டியதை 2.5 வருடங்கள் ஆகி விட்டது. நியூயார்க் டைம்ஸ் படிச்சிட்டு இருந்தவங்களோட தனிப்பட்ட வாழ்க்கை கட்டுரைகளாக நியூயார்க் டைம்ஸ் அனுப்புறாங்க.. அதுல 2000, 3000 கட்டுரைகள் வந்தபின் தான் வெளிவந்தது.. அதையே ஷோவா பண்ணலாம் னு யோசிக்கும் போது முதல் சீசனில் 8 கதைகள் பண்ணாங்க.. இரண்டாவது சீசன் பண்ணும் போது நியூயார்க் தவிர வேறு எங்க பண்ணலாம் னு யோசிக்கும் போது மற்ற மொழிகளில் பண்ணாங்க.. இந்தியாவில் 3 மொழிகள் அதை தவிர ஜப்பானிய மொழியில், டச் மொழிகளில் பன்றாங்க.. இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழில் பண்ண முடிவு செய்தார்கள்.. வெவ்வேறு கட்டுரைகள் தான். குழு கட்டுரைகளை தேர்ந்தெடுத்து 7 கதைகளை எடுக்கிறாரகள். நியூயார்க் மண் சார்ந்த கதையை எப்படி தமிழகத்தில் சென்னையில் நடக்க கூடிய கதையா மாத்துறதுனு.. மண்ணும் மண்ணை சார்ந்த மக்களும் எடுக்க திட்டமிட்டு அதை மாற்றினோம்..ஒவ்வொரு ஏரியாவில் ஒரு கதை.. எதார்த்தமான காதல் கதையா திட்டமிட்டு வந்திருக்கு..." என்றார் இயக்குனர் தியாகராஜன் குமாராஜா.