இந்திய சினிமாவின் மிகப்பெரிய திரை ஆளுமை சிரஞ்சீவி அவர்களின் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்துடன் திரைத்துறைக்கு அடியெடுத்து வைத்தவர் நடிகர் ராம் சரண். பூரி ஜெகநாதன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2007 ம் ஆண்டு வெளியான ‘சிறுத்த’ படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்த ராம் சரண் தனித்துவமான உடல் மொழியுடன் ஸ்டைலான நடனத்தினாலும் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். பின் இயக்குனர் ராஜமௌலியின்’மகதீரா’ திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பினை வெளிபடுத்தி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். சொல்லப்போனால் இந்தியளவு மகதீரா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இரண்டாவது படத்திலே தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தெலுங்கு திரையுலகில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்தார். அதன் பின் தொடர்ந்து அட்டகாசமான திரைப்படங்களை கொடுத்து திரையுலகின் மிக முக்கியமான கதாநாயகனாக வலம் வருகிறார். அதன்படி ரச்சா,நாயகன், எவடு,புரூஸ்லீ, ரங்கஸ்தளம், வினைய விதய ராமா ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் அடித்தது.

இரண்டாவது முறையாக பிரமாண்ட இயக்குனரான ராஜமௌலியுடன் கூட்டணி அமைத்த ராம் சரண் ‘ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தார். ஜூனியர் என்டிஆர் உடன் திரையை பங்கிட்ட ராம் சரண் அட்டகாசமான நடிப்பின் மூலம் உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இன்று ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கார் விருது உட்பட பல உலக நாடுகளின் மேடைகளை அலங்கரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ராம் சரண் தனது தந்தையும் நடிகருமான சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா படத்தில் நடித்திருந்தார்.

தற்போது உலகளவில் புகழ்பெற்ற ராம் சரண் தனது 15 வது படமான ‘கேம் செஞ்சர்’ இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டத்தின் மூலம் உலகளவு ரசிகர்களை பெற்ற இயக்குனர் ஷங்கர் முதல் முதலாக தெலுங்கு திரைத்துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ராஜமௌலியை தொடர்ந்து ராம் சரண் பணியாற்றும் அடுத்த பிரம்மாண்ட இயக்குனரின் படமாக இது உருவாகி வருகிறது. இந்நிலையில் ராம் சரண் பிறந்தநாளான இன்று படத்தின் டைட்டிலை வெளியிட்டது மட்டுமல்லாமல் ராம் சரண் புதிய லுக் உள்ள போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. இதனையடுத்து ரசிகர்கள் ராம் சரண் போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கேம் செஞ்சர் திரைப்படத்தில் ராம் சரண் அவருடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, சுனில், அஞ்சலி மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். மேலும் அரசியல் கதைக்களமாக உருவாகியுள்ள படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். திரைக்கதையை எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு வெங்கடேஷன் அவர்களும் பாடலாசிரியர் விவேக் மற்றும் எழுத்தாளர் பர்ஹத் சாம்ஜி ஆகியோர் எழுதி வருகின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் ஒளிப்பதிவாளர் திரு மற்றும் நடன வடிவமைப்பு பிரபு தேவா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.