மண்டேலா படத்தின் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தில் மிரட்டல் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், சரிதா, மோனிஷா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிப்ன் மத்தியில் ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அயன்னா ஒளிப்பதிவு செய்ய பிளோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் முன்னதாக வெளியான சீனா சீனா, வண்ணாரப் பேட்டையில, வா வீரா ஆகிய மூன்று பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது.

இந்நிலையில் கடந்த ஜூலை 14 ரசிகர்களின் மிகப்பெரிய ஆவலுடன் உலகளவில் மாவீரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு (மஹாவீரடு) ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் வெளியான மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அவர்களது ஏகோபித்த வரவேற்பை அளித்து வருகின்றனர். ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் நேர்மறையான கருத்துகளுடன் திரையரங்குகளில் மாவீரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இந்தியாவின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஷங்கர் தர்போதுப் மாவீரன் படம் பார்த்து மாவீரன் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். அவர் இது குறித்து ட்விட்டரில் பகிர்ந்த பதிவில்,

“அற்புதமாக எழுதப்பட்ட திரைப்படம் ‘மாவீரன்’. மடோன் அஷ்வினின் புத்தி சாலிதனம் இப்படம் மூலம் தெரிய வருகிறது. திரைக்கதைக்குள் உள்ள பிரமாதமாக நகைச்சுவை உணர்வு மிகவும் ரசிக்கும் படி இருந்தது. பாராட்டுக்குரிய நடிப்பினை சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார். அதிதி அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சரிதா, யோகி பாபு மற்றும் மிஷ்கின் சிறப்பாக இப்படத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நடனம் குறிப்பிடதக்க வகையில் இருந்தது. இந்த படத்திற்காக உழைத்த அனைவர்க்கும் எனது பாராட்டுகள்.! நிச்சயமாக குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு மகிழ்ச்சியான புதுமையான அனுபவம் கொடுக்க கூடிய திரைப்படம்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இணையத்தில் ரசிகர்களால் இப்பதிவு வைரலாகி வருகிறது.

பரவலாக மாவீரன் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் பாராட்டுகள் மாவீரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை உறுதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.