தென்னிந்தியாவின் குறிப்பிடப்படும் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சசிகுமார். கடந்த 2008ல் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகான இவருக்கு முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற சுப்ரமணியபுரம் படத்திற்கு பின் ஈசன் என்ற படத்தை தயாரித்து இயக்கினர். முதல் படம் போல் இரண்டாவது படம் கொண்டாடப்படவில்லை. அதன்பின்னர் திரையுலகில் ஹீரோவாகவும் களமிறங்கினார் சசிகுமார் தொடர்ந்து நாடோடிகள், போராளி, குட்டிப்புலி, சுந்தரபாண்டியன், பிரம்மன், கிடாரி போன்ற பல படங்களில் நடித்து ஹீரோவாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் கொம்பு வெச்ச சிங்கம்டா, நான் மிருகமாய் மாற, காரி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின இந்த படங்கள் சசிகுமாருக்கு பெரிதளவு கைகொடுக்கவில்லை. அதன்பின் இந்தாண்டு மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான் ‘அயோத்தி’ ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவு கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியை சசிகுமாருக்கு கொடுத்தது. அயோத்தி படத்தின் வெற்றியையடுத்து சசிகுமார் அடுத்ததாக ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘நந்தன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சசிகுமார் திரைத்துறையில் ஜொலிக்க காரணமாக அமைந்த தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான ‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி 15 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் நடிகரும் இயக்குனரும் கலந்து கொண்டு 15 ஆண்டு கால சுப்ரமணியபுரம் திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் சுப்ரமணியபுரம் மற்ற மொழியில் உருவாக்குவது குறித்து பேசிய சசிகுமார், "சுப்ரமணியபுரம் படத்தோட அடுத்த பாகம் எப்போ னு எல்லோருமே கேக்றாங்க.. திரும்பவும் என்னால சுப்ரமணியபுரம் பண்ண முடியாது.. என்ன கூட கேட்டாங்க மற்ற மொழியில் சுப்ரமணியபுரம் பண்ண சொல்லி, அந்த படத்தை பொறுத்த வரை அந்த படத்தை திரும்பவும் கொண்டு வர முடியாது. என்னாலையும் முடியாது. எத்தனை கோடி கொடுத்து தெலுங்கு, இந்தி னு பண்ண சொன்னாலும் என்னால அதை பண்ண முடியாது. சுப்ரமணியம் அந்த தருணத்தில் உருவான படம். அந்த தருணம் திருப்ப வர முடியாது. அந்த நேரத்தில் இருந்த மனநிலை, அந்த நேரத்தில் அமைந்து வந்தது தான் சுப்ரமணியபுரமா நான் பாக்குறேன்." என்றார்.

மேலும் அதை தொடர்ந்து சசிக்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்து அவர் பேசுகையில், "இப்போ நான் அடுத்த படம் இயக்கவுள்ளேன். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு. நடிகரா இருந்து இயக்குனரா திரும்பவும் படம் பண்றோம் அதற்கான பொறுப்புணர்வும் இருக்கு.. வேலா ராமமூர்த்தி எழுத்தில் வெளிவந்த குற்றப்பரம்பரை கதையை அடிப்படையாக கொண்டு இணைய தொடரா அதை பண்றேன்." என்றார் நடிகரும் இயக்குனருமான சசிக்குமார்.

மேலும் இயக்குனரும் நடிகரும் சசிகுமார் அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. வீடியோ இதோ..