தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ரத்னகுமார், ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரான பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஆண்தாலாஜி திரைப்படத்தில் “மது” எனும் குறும்படத்தை இயக்கினார். பலரது கவனத்தை ஈர்த்த மது குறும்படத்தின் நீட்சியாக மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனது முதல் படமாக “மேயாத மான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்து வெளிவந்த மேயாத மான் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து தனது அடுத்த திரைப்படத்தில் நடிகை அமலா பாலுடன் கைகோர்த்த இயக்குனர் ரத்னகுமார் ஆடை திரைப்படத்தை இயக்கினார். வித்தியாசமான திரில்லர் படமாக வந்த ஆடை திரைப்படத்தில் ஆடைகள் இன்றி அமலா பால் நடித்திருந்ததும் அது படமாக்கப்பட்ட விதமும் பலராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை கையாளும் இயக்குனராக வலம் வரும் இயக்குனர் ரத்னகுமார் அடுத்தடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

குறிப்பாக முதல் முறை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் இணைந்து நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்தில் வசனங்களில் பணியாற்றிய இயக்குனர் ரத்னகுமார், தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து ஆல் டைம் ரெகார்ட்டாக வசூல் சாதனை படைத்த விக்ரம் திரைப்படத்திலும் வசனகர்தாவாக பணியாற்றினார். தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் லியோ திரைப்படத்திலும் திரைக்கதை மற்றும் வசனங்களில் இயக்குனர் ரத்னகுமார் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குலுகுலு. நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க வித்தியாசமான ஆக்சன் காமெடி திரைப்படமாக உருவான குலு குலு திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, ஜார்ஜ் மரியன், நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சர்க்கிள் பாக்ஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்த, குலு குலு திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த குலுகுலு திரைப்படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற போதும் மிகப்பெரிய வெற்றியை பெற தவறியது.

இந்த நிலையில் குலு குலு திரைப்படத்தின் மீது சென்சார் குழு மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாக தற்போது இயக்குனர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தி ஹிந்து நாளிதழில் சென்சாரின் தற்போதைய போக்கை குறிப்பிட்டு செய்தி ஒன்று வெளியானது. இதில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள குலு குலு படத்தின் தெலுங்கு வெர்ஷனில் “இந்திய பிரதம மந்திரி” என குறிப்பிடும் ஒரு காட்சியை எந்தவிதமான காரணமும் இன்றி எந்தவிதமான விளக்கமும் இன்றி சென்சார் குழு அதிகாரிகள் நீக்கியுள்ளனர். எனவே இதனால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளான இயக்குனர் ரத்னகுமார், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “காரணமற்ற நீக்கம் மொத்தத்தில் நியாயமற்றது. நான் குலு குலு படத்திற்காக மட்டும் பேசவில்லை. ஜனநாயகத்தின் ஒரு தூணாக கலை இருக்கிறது. அந்த கலையின் மீது சென்சார் போர்டு மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறது. தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற முயல்வதற்கு பதிலாக இந்தியாவை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என மாற்றி விடுங்கள். நன்றி” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இயக்குனர் ரத்ன குமாரின் இந்த கண்டனத்திற்கு தற்போது ஆதரவு பெருகி வருகிறது. இயக்குனர் ரத்னகுமாரின் அந்த கண்டன பதிவு இதோ…