திரைத்துறையில் மட்டுமல்லாமல் சமூதாய கருத்துகளை நடைமுறையிலும் பல இடங்களில் பல செயல்பாடுகள் மூலம் பரப்புரை செய்து வருபவர் இயக்குனர் பா ரஞ்சித். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 30 ம் தேதி பா ரஞ்சித் அவர்களின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் கவிஞரும் உதவி இயக்குனருமான விடுதலை சிகப்பி என்பவர் ‘மலக்குழி மரணம்’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வாசித்தார். இதில் இந்து மத கடவுள்களான ராமர், சீதை, அனுமனை இழிவுபடுத்தும் விதமாக கவிதை இருந்தது என்று இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஒருவர் கவிஞர் விடுதலை மீது புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து தமிழ் நாடு காவல் துறை விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.

இந்த சம்பவம் இணையத்தில் தீயாய் பரவியது. படைப்பாளியின் சுதந்திரத்தை அடக்குவதா? இதுதான் ஜனநாயக நாடு? என்று கேள்வி எழுப்பி ஒருதரப்பினர் விடுதலை அவருக்கு ஆதராவாக பேசியும் கடவுள்களை இழிவாக பேசுவதா என்று அவருக்கு எதிராக சிலரும் கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில்

நீலம் பண்பாட்டு மையம் நிறுவனரும் திரைப்பட இயக்குனருமான பா ரஞ்சித் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்வு குறித்து விளக்கம் அளித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதனுடன் பதிவு இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார் விடுதலை சிகப்பி. இதை புரிந்து கொள்ளாத பட்டியலின விரோத கொள்கை கொண்ட பாஜக, இந்து பாசிச அமைப்புகளுக்கும், அவர்களின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வழக்கு தொடுத்திருக்கும் தமிழக காவல் துறைக்கும் கடும் கண்டனங்கள்!” என்று முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காவல் துறை போன்றோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “சில குழுக்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து செய்துவந்ததின் தொடர்ச்சியாக விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வரன் மீது ஐந்து பிரிவுகளில் E 4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. தனி நபரின் படைப்புச் சுதந்திரத்தை மதப் பிரச்சினையாக மாற்றும் செயலை ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக தனிப்பட்ட முறையில் விடுதலை சிகப்பி இக்குழுக்களால் மிரட்டப்படுகிறார்; இக்குழுக்கள் கொடுக்கும் அழுத்தத்தால் கடந்த மூன்று நாட்களாக விடுதலை சிகப்பியின் கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

இக்கவிதையின் பாடுபொருள் மலக்குழி மரணம் பற்றியது, உண்மையில் அவைதான் பேசுபொருளாகியிருக்க வேண்டும். அதைத் திசை மாற்றி இதை மதப் பிரச்சினையாக உருமாற்றும் நடவடிக்கையை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது ” என்று நிகழ்வில் நடந்த தருனங்களுடன் சேர்த்து குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குனர் பா ரஞ்சித் அவரது பதிவு மற்றும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வெளியான அறிக்கையும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.