கடந்த ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆரவார ஆதரவோடு திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர். அதன்படி ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் தமிழகமெங்கும் மாமன்னன் திரைப்படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் திரைபிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தமிழி சினிமாவில் முன்னணி இயக்குனரான இயக்குனர் பா ரஞ்சித் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தை பார்த்து விட்டு அவரது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில்,

மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLA க்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற இயக்குனர் மாரிசெல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவர்க்கும் வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித்.

தற்போது பா ரஞ்சித் அவர்களின் ட்விட்டர் பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. தொடர்ந்து மாமன்னன் படக்குழுவினருக்கு இது போன்ற பல நேர்மறையான கருத்துகள் வந்த வண்ணம் உள்ளது.

மாமன்னன் படத்தையடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தன் சொந்த தயாரிப்பில் வாழை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து கபடி கதைக்களத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் இயக்கவுள்ளார். அதையடுத்து நடிகர் தனுஷ் உடன் இரண்டாவது முறை கூட்டணி அமைக்கவுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.