மிக நேர்த்தியான திரைக்கதை, கச்சிதமான கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான காட்சி அமைப்புகள், சுவாரசியமான களம் என தனது முதல் படமான மாநகரம் திரைப்படத்திலேயே மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது திரைப்படத்தில் இன்னும் ஒரு படி முன்னேறி இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றார். கார்த்தியுடன் இரண்டாவது படத்தில் இணைந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி திரைப்படம் கதாநாயகி, பாடல்கள் என வழக்கமான சினிமாவில் இருக்கும் பல விஷயங்களை தவிர்த்து அதிரடியான ஆக்சன் திரில்லர் ட்ரீட்டாக முற்றிலும் புதிய அனுபவத்தை கொடுத்தது. ஒரு சோதனை முயற்சியான படமாக இருந்தாலும் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பு பெற்ற கைதி திரைப்படம் நல்ல வசூல் செய்தது.

இதனைத் தொடர்ந்து தனது மூன்றாவது திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் கைகோர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மற்றொரு கையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைய வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் இருந்த நெருக்கடியான சூழ்நிலைகளை கடந்து மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது திரைப்படத்தில் உலக நாயகனையே இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த வகையில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஆல் டைம் ரெகார்ட்டாக 500 கோடி ரூபாய் வசூலித்தது.

இந்த வரிசையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில், அடுத்த கட்டமாக தற்போது படக்குழுவினர் காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் லியோ ஷூட்டிங்கில் தற்போது இயக்குனர் மிஷ்கின் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது Twitter பக்கத்தில் இயக்குனர் மிஷ்கினுடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “எனது அன்பான மிஷ்கின் சார், உங்களோடு இவ்வளவு நெருக்கமாக பணியாற்ற கிடைத்த இந்த அற்புதமான வாய்ப்பிற்கு நான் எவ்வளவு கடமைப்பட்டு இருக்கிறேன் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. லட்சக்கணக்கான நன்றிகள் சொன்னாலும் போதாது. உங்களோடு படப்பிடிப்பு தளத்தில் இருந்தது அட்டகாசமான அனுபவமாக இருந்தது. உங்களுக்கு நான் எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது. இருந்தாலும் லட்சக்கணக்கான நன்றிகள்! #லியோ” குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த பதிவு இதோ…