தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந் த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த மாமன்னன் திரைப்படம் கடந்த சில தளங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவி சார்பில் மினி கூப்பர் கார் ஒன்று அன்பு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. பரியேறும் பெருமாள் & கர்ணன் என தொடர்ச்சியாக சமூக நீதி பேசும் படங்களின் வழியாக மக்கள் மனதை வென்ற இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படத்திலும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கடைசி திரைப்படம் மாமன்னன் தான். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்த மாமன்னன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து வைகைப்புயல் வடிவேலு அவர்களின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில், காத்திருந்த அத்தனை ரசிகர்களுக்கும் தனது நடிப்பால் மிகப்பெரிய ட்ரீட் கொடுத்திருக்கும் வடிவேலு தான் ஒரு ஆகச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் நடிகையும் இயக்குனருமான சுகாசினி மணிரத்தினம் அவர்களோடு கலந்து உரையாடிய இயக்குனர் மாரி செல்வராஜ் தனது திரைப்பயணம் மற்றும் வாழ்க்கைப் பயணத்தின் அனுபவங்கள் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரிடம் உங்களுக்கு "ஹீரோ" ஆக வேண்டும் என்று ஆசை இருந்ததா?, ஏனென்றால் நிறைய இயக்குனர்கள் ஹீரோவாக வேண்டும் அல்லது நடிக்க வேண்டும் என்று தான்.. இயக்குனர் ஷங்கர் சாரில் இருந்து எல்லோரும்.. எஸ்.ஜே.சூர்யா எல்லாம் சொல்கிறார் நான் நடிக்கத்தான் வந்தேன் இயக்குனர் ஆக்கிவிட்டார்கள் இப்போது மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறேன் என சொல்கிறார்கள். அந்த மாதிரி உங்களுக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததா?” எனக் கேட்டபோது,

“உதவி இயக்குனராக சினிமாவிற்குள் நுழையும் போது என்ன நடக்கிறதோ நடக்கட்டும், அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை கிடைக்குமா என்று தெரியவில்லை அல்லவா?, யார் நம்மை சேர்த்துக் கொள்ளப் போகிறார் என்பது தெரியாது அல்லவா..? எப்படியாவது சினிமாவிற்குள் நுழைய வேண்டும் ஏதாவது ஒரு வழியில் போக வேண்டும் நடிப்பும் அதற்கான ஒரு வழி தானே அப்படி நடிப்பதற்கான ஆசை வந்தது. இயக்குனர் ராம் அவர்களின் முதல் படத்தில் கற்றது தமிழ் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆள் தேடிக் கொண்டிருந்த போது “நீ நடி” என அவர் சொன்னார். நானும் அதை அப்படியே செய்து விட்டேன். “நன்றாக பண்ணுகிறாய் கேமரா பயம் எல்லாம் உனக்கு ஒன்றுமே இல்லை. நன்றாக பண்ணுகிறாய்” என சொன்னார். ஆனால் நான் இயக்குனரான பிறகு எனக்கு நடிப்பில் ஈடுபாடு இல்லை. இப்போது நடிப்பில் சுத்தமாகவே ஈடுபாடு இல்லை என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியும்.” என பதிலளித்து இருக்கிறார். இயக்குனர் மாரி செல்வராஜின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.