தென்னிந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மெனன். நேர்த்தியான திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து அஜித், சூர்யா, சிலம்பரசன், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு 2 படத்திற்கான முன் தயாரிப்பிலும் தன் இயக்கத்தில் நீண்ட நாள் ரிலீஸுக்கு காத்திருக்கும் சியான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் வேலையிலும் தற்போது பிஸியாக இருந்து வருகிறார் இயக்குனர் கௌதம் மெனன்.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் கலந்து கொண்டு தன் திரைப்பயணம் குறித்தும் லியோ படத்தில் நடித்து வருவது குறித்தும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் கடுமையான விமர்சனத்திற்கு எதிராக பேசி சர்ச்சை உருவான தருணம் குறித்து பேசுகையில்,

நான் எந்த சமூக ஊடகங்களை போய் பார்க்க மாட்டேன். என்னோட கணக்கு என் குழு கிட்ட இருக்கு.. எதாவது விஷயத்தை ரிலீஸ் பண்ணாலும் அது எப்படி போயிருக்குனு கூட பார்க்க மாட்டேன். பெரிய பெரிய இயக்குனர்கள் இது பற்றி எனக்கு முன்னாடியே சொல்லிருக்காங்க.

நம்ம ஒன்னு நினைச்சு ஒரு வேலை கொடுக்குறோம். அதை விமர்சிக்க யார் அவர்கள்? அது மக்களிடம் சேரலானா அந்த வைப் வந்துடும். பிடிக்கலன்னு சொல்ல நீ யாரு? போய் சேரல.. பெரிய கூட்டத்திற்கு அந்த படம் போய் சேரல னு சொல்லலாம். கண்டிப்பா அது ஒரு 10 பேருக்கு பிடிச்சிருக்கும். எதிர்பார்ப்பு தான் பிரச்சனை. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின்பு நடுநிசி நாய்கள் வரும்போது ஒரு எதிர்பார்ப்பு வருது. அது மக்கள் ஏத்துக்கல.. அதுதான் புரியாம இருந்தது. என்னை பற்றி என்ன விமர்சனம் வருதோ அது என்னை பாதிக்காது. மீம்ஸ், ட்ரோல்களை கூட கடந்து போகலாம்.

கடுமையான விமர்சனங்கள் தான் பொறுத்துக்க முடியல.. மத்தவங்களை இளக்காரமா பார்க்குறது தவறு.. பிடிக்கலனு சொல்றதுக்கும் ஒரு மரியாதையான வார்த்தை இருக்கு.. என்னை அவர் (ஒரு விமர்சகர்) என்ன சொன்னாலும் அது என்னை பாதிக்கல.. மத்த இயக்குனர் பத்தி பேசும் போது தான் அது என்னை ரொம்ப பாதிச்சுது.. அந்த நேரத்துல வந்த பிரச்சினை தான் அது. அதுக்கப்பறம் அவங்க தொடர்ந்து வாதம் பண்ணாங்க. அந்த நேரத்தல லோகேஷ் கால் பண்ணி, "சார் நீங்க போய், ஏன் அதை பெருசா ஆக்றீங்க.. நம்ம ஒண்ணு சொல்லி அந்த விமர்சனத்தை ஏன் 10 பேர் போய் பார்க்கனும். ' ன்னு அப்படிதான் சொன்னார். எனக்கு அந்த நேரத்துல புரியல.‌ அப்பறம் புரிஞ்சுது..” என்றார் இயக்குனர் கௌதம் மேனன்.

மேலும் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே.