சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கார் விருது 95 வது ஆண்டு விழா கோலாகலமாக லாஸ் ஏஞ்சல்ஸ் – ல் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து சிறந்த திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுகளுக்காக பல பிரிவுகளில் போட்டியிட்டனர். இதில் இந்தியாவை சேர்ந்த ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் ‘தி எலிபெண்ட் விச்பரர்ஸ்’ சிறந்த ஆவண குறும்பட பிரிவிலும் மற்றும் ஆல் தட் ப்ரிதேஸ் என்ற ஆவண திரைப்படம் சிறந்த ஆவணபட பிரிவிலும் போட்டியிட்டனது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகளிலிருந்து இந்த விழாவிற்கு தலை சிறந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சிறந்த பாடல் பிரிவில் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருதினை வென்றது. விருதினை பாடலின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் மேடையேறி பெற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ‘தி எலிபெண்ட் விச்பரர்ஸ்/ விருதினை வென்றது.

இதனையடுத்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இரண்டு படங்களும் ஆஸ்கார் விருதினை வென்றதில் இந்திய நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு திரையுலக ரசிகர்களும் இவ்விரு விருதுகளையும் கொண்டாடி படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் வாழ்த்துகள் ஒருபுறம் இருந்தாலும் விமர்சனமும் எழுந்தது. இதைவிட சிறந்த பாடல்கள் அல்லது சிறந்த இசையமைப்பாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்திற்கு விருது பெற்றதை எப்படி பார்க்கிறீர்கள் என்பது குறித்து இயக்குனரும் நடிகருமான அமீர் அவர்களிடம் கேள்வி கேட்கப் பட்டது இது குறித்து அவர் பேசியது,

" இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் விருதுகள் கிடைப்பது பாராட்டுக்குரிய விஷயம். அதுக்குள்ள அரசியல் இருக்கானு ஆராய்ந்து பார்ப்பது நம்ம வேலை கிடையாது. கலைக்கு அரசியல் கிடையாது. அந்த வகையில் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்தது இந்திய திரையுலகத்திற்கு பெருமை. ஆனால் ஆஸ்கார் விருது பெரிய விருது னு நான் நினைச்சதே இல்லை. அது எல்லொரும் பார்ப்பதாலே அதற்கு முக்கியத்துவம் இருக்கே தவிர அது அந்த நாட்டு தேசிய விருது போலதான்.

இருந்தாலும் இந்திய திரைப்படங்களுக்கு அங்கு அங்கீகாரம் கிடைக்கும் போது இந்தியர்களுக்கு கிடைக்க கூடிய பெருமை அது எனக்கு கிடைத்தது போல நானும் நினைத்து கொள்கிறேன்." என்றார்.

மேலும் ஆஸ்கார் விருதுக்கு பின் இருக்கும் அரசியல் - விளம்பரங்கள் – விமர்சனம் குறித்து கேள்விக்கு அவர், "30 வருடங்களுக்கு முன்பு விருதுகளுக்கான மரியாதை அங்கீகாரம் என்பது வேறு.. இப்போது எல்லா விருதுகளிலும் அரசியல் இருப்பதாக நான் நம்புகிறேன். அது ஆஸ்கார் மட்டுமல்ல, தேசிய விருதாக இருக்கட்டும், மாநில விருதாக இருக்கட்டும், தனியார் விருதாக இருக்கட்டும் எல்லாத்தையும் ஒரு அரசியல் இருக்கின்றது. அது பற்றி விவரித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.. அதை தவிர்த்துவிட வேண்டும்." என்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் ஜீ5 தயாரிப்பில் இயக்குனர் அமீர் தற்போது ‘நிலமெல்லாம் ரத்தம் இணைய தொடரில் நடிக்கவுள்ளார். மேலும் வெற்றிமாறன் எழுத்தில் ‘இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தையும் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.