தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்து கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் வடசென்னை. கடந்த 2018 ல் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வடசென்னை’. லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, பவன், கிஷோர், டேனியல் பாலாஜி, தீனா உள்ளிட்ட பலர் முக்கியமான வேடங்களில் நடிக்க இயக்குனரும் நடிகருமான அமீர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். வடசென்னை முதல் பாகம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட திரைப்படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி , விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை 2 இயக்கி வருகிறார். அதன்பின் சூர்யாவுடன் கூட்டணி அமைத்து வாடிவாசல் என்ற படத்தை எடுக்கவுள்ளார் இப்படங்களுக்கு பின்னரே வடசென்னை 2 வெளியாகும் என்று இயக்குனர் வெற்றிமாறன் முன்னதாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து வடசென்னை 2 படம் மீது பல தகவல்கள் கேள்விகள் ரசிகர்களிடம் எழுந்து வந்தது. இதனிடையே வடசென்னை படத்தில் இடம் பெற்றுள்ள அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரம் முழு படமாக ‘ராஜன் வகையறா’ என்ற பெயரில் உருவாகும் என்ற வதந்தியும் பரவியது. இது குறித்து நடிகரும் இயக்குனருமான அமீர் அவர்களிடம் கேட்கையில்,

எனக்கும் விருப்பம் உள்ளது ஏற்கனவே அந்த காட்சிகளை என்னிடம் காட்டினார். இயக்குனர் வெற்றிமாறனுக்கு நிறைய வேலைகள் உள்ளது அதனால் அவர் இன்னும் அதை ஆரம்பிக்கவில்லை என்று நினைக்கிறேன் சூழல் வந்தால் நானும் அதை பார்க்க ஆர்வலாக உள்ளேன்.” என்றார். மேலும் தொடர்ந்து அமீர் சொந்த இயக்கம் குறித்த கேட்கையில், “தற்போது படப்பிடிப்பு நடைபெறுகிறது. இறைவன் மிகப் பெரியவன் ராமநாதபுரம் கோயம்புத்தூர் பகுதிகளில் முடிந்துவிட்டது. இந்த வருடத்திற்குள் படப்பிடிப்பு முடிந்து விடும்.” என்றார்.

அதை தொடர்ந்து பான் இந்தியா படங்களால் மாற்று மொழி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்த கேட்கையில், “அறிவியலின் வளர்ச்சியை தடுக்கவே முடியாது. கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது அப்போது அவரை கேபிள் டிவி பிரச்சனை சம்பந்தமாக அவரை சந்தித்தேன், அப்போது அவர் கூறினார் அறிவியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். ஆட்டோ ரிக்ஷா வரும்போது சைக்கிள் ரிக்ஷா பாதிக்கும். ஆனால் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்கள் ஆட்டோ ஓட்ட பழகிக் கொள்ள வேண்டும். அதுபோல அறிவியலை நம்மால் தவிர்க்க முடியாது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். திரையரங்கில் பார்த்த சினிமா இன்று உள்ளங்கைக்கு வந்து விட்டது. முன்பெல்லாம் சினிமாவில் எடிட்டிங் செய்யும் போது திரையை தூரமாக வைத்து தான் வேலை பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது பக்கத்தில் வைத்து வேலை செய்கிறார்கள். ஏனென்றால் அவையெல்லாம் ஓடிடியிலேயே வெளியாகும் என்பதால் அப்படி வேலை செய்கிறார்கள். இதை தவிர்க்கவே முடியாது. அதுபோல பான் இந்தியா படங்களும் வந்து தான் ஆகும். ஒரு மைனஸ் இருந்தால் ஒரு பிளஸ் இருக்கும். தொழிலாளர் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால், ஓடிடிகாகவே படங்கள் எடுக்கப்படுகிறது. வருஷத்திற்கு 250 படங்கள் வேலை நடைபெறுகிறது. சென்னையில் அனைத்து ஸ்டுடியோக்கலும் பிசியாக உள்ளது. அந்தத் தொழில் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அதை நாம் தவிர்க்க முடியாது. அதற்கேற்றாற் போல் நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்”. என்றார் இயக்குனர் அமீர்.