இந்த 2023 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்கு படம் தரமான கதைக்களங்களையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகர் தனுஷ், கோலிவுட் கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் அசத்தி வருகிறார். அந்த வடையில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்த வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பிரம்மாண்டப் படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், மேலும் ஒரு தெலுங்கு இயக்குனரின் புதிய படத்திலும் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

அடுத்ததாக ராஞ்ஜனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். இதனிடையே தனுஷ் நடிப்பில் அடுத்த அதிரடி திரைப்படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பகுதிகளில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடைபெறுவதாக சர்ச்சைகள் வெடித்தன. அதனைத் தொடர்ந்து மதுரையில் படப்பிடிப்பு நடத்திய போதும் அதே மாதிரியான சில பிரச்சனைகள் எழுந்தன. இருப்பினும் தடைகளுக்கிடையே கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. சுற்றி பல நூறு பேர் பிணங்களாக கீழே விழுந்து கிடக்க அவர்களுக்கு மத்தியில் காயங்களோடு கையில் துப்பாக்கியை ஏந்தியபடி நிமிர்ந்து நிற்கும் தனுஷின் இந்த கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. மிரட்டலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…