இந்த 2023 ஆம் ஆண்டில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படங்களில் மிக முக்கியமான படங்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டைலர் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர். கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். நாளை ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது.

அதேபோல் நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மின்னல் திரைப்படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக காத்திருக்கிறது. ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அதிரடியான படம் தான் கேப்டன் மில்லர். தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

முன்னதாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ஜெயிலர் வாரம்” என பதிவிட்டது மிகப்பெரிய ட்ரெண்ட் ஆனது. அதைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெயிலருக்காக மில்லர் காத்திருக்கிறார்" என பதிவிட்டதும் வைரலானது. கடந்த மாத இறுதியில் தனுஷின் பிறந்த நாளில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மிரட்டல் ஆன டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நாளை ஜெயலலிதா திரைப்படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் திரையரங்குகளில் இடைவேளையின்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் திரையிடப்படும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் 3500-க்கும் மேற்பட்ட திரைகளில் இடைவேளையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸின் அந்த அதிரடி அறிவிப்பு இதோ…