எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது 62 ஆவது திரைப்படமாக தயாராகும் விடாமுயற்சி திரைப்படத்தில் முதல் முறையாக இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித் குமார் கைக்கோர்த்திருக்கிறார். தனக்கென தனி ஸ்டைலில் பக்கா ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து வரும் மகிழ் திருமேனியுடன் அஜித் குமார் இணைந்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். குறிப்பாக முதல் முறையாக இயக்குனர் மகிழ் திருமேனி - அஜித்குமார் இணைந்திருப்பதால் விடாமுயற்சி எந்த மாதிரியான படமாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் கூடியிருக்கிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த தயாரிப்பாளர் திரு.தனஞ்செயன் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரிடம், இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களின் முந்தைய படங்களை எல்லாம் பார்த்தோம் என்றால் அவை ரொம்ப பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் கிடையாது.. அவருடைய ஸ்டைல் ரொம்பவும் ஸ்டைலிஷான படங்களாக இருக்கும்... இப்போது திடீரென அஜித்குமார் அவர்கள் மாதிரி ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் ஒரு பெரிய ஹீரோவை கையாளும் போது நீங்கள் தனிப்பட்ட முறையில் பேசி இருப்பீர்கள் அல்லவா உங்களுடைய கணிப்பு எப்படி இருக்கிறது இது அஜித் குமாரின் படமாக இருக்குமா? அல்லது மகிழ் திருமேனியின் படமாக இருக்குமா? எனக் கேட்டபோது,

“எப்போதுமே நீங்கள் ஒரு பெரிய ஸ்டார் வைத்து படம் பண்ணும் போது அது பெரிய ஸ்டாரின் படம் தான்.. அது இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களின் டிரீட்மெண்டில் இருக்கும். அவருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது அல்லவா.. அவருடைய ஸ்டைலில் அஜித்குமார் அவர்களின் படமாக இருக்கும். அப்படித்தான் இருக்குமே தவிர முழுக்க முழுக்க அஜித் சார் படமாகவும் இருக்காது முழுக்க முழுக்க மகிழ் திருமேனியின் படமாகவும் இருக்காது... கட்டாயமாக இது அஜித் சாருக்கான ஒரு ட்ரிப்யூடாக இருக்கும். அதை மகிழ் திருமேனி அவரது ஸ்டைலில் கொடுப்பார். எனக்கு மகிழ் திருமேனியின் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. நான் இணைந்து பணியாற்ற விரும்பும் சில இயக்குனர்களில் அவரும் ஒருவர். அவருடைய கலகத் தலைவன் திரைப்படம் ரிலீஸாவதற்கு முன்பு நான் அவரிடம் கேட்டேன் நாம் அடுத்த படம் பண்ணலாம் என்று.. அதற்காக ஒரு ஹீரோவிடம் எல்லாம் பேசி அந்த ஹீரோவும் ஏற்றுக்கொண்டார். அதற்காக அந்த ஹீரோவிடம் போய் கதை சொல்லலாம் என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தோம். பின்னர் கலகத் தலைவன் படத்தில் ரிலீஸுக்கு பிறகு எனக்கு ஒரு இரண்டு வாரம் அவகாசம் கொடுங்கள் நான் இதிலிருந்து வெளியில் வரவேண்டும் என கேட்டிருந்தார். அதற்குள் அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது அவர் போய்விட்டார். நான் வாழ்த்து சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினேன்.. பரவாயில்லை நாம் பேசிக் கொண்டிருந்தோம் திடீரென உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பே கிடைத்திருக்கிறது என்று…” என பேசி இருக்கிறார். இன்னும் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.