இந்திய சினிமாவில் இதுவரை எந்த தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய தளபதி விஜயின் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. தனக்கென தனி பாணியில் அதிரடியான ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன், இயக்குனர் மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த இந்த லியோ திரைப்படம் முதல் நாளிலேயே 148.75 கோடிகள் வசூலித்து இந்திய சினிமாவிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. இருப்பினும் இந்த முதல் நாள் வசூல் உண்மையா பொய்யா என்று சமூக வலைதளங்களில் பலரும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆகும் பின்னர் ஒரு சிலர் ஒரு கலெக்ஷன் சொல்லுவார்கள் உடனே மற்றவர்கள், “நீங்கள் எல்லாம் சொல்லாதீர்கள் தயாரிப்பாளர் சொல்வார்கள் அதைத்தான் நாங்கள் நம்புவோம் அதுதான் உண்மை” என்பார்கள். இந்த முறை தயாரிப்பாளரே சொல்கிறார் ஆனால் இது உண்மையா பொய்யா என நிறைய கேள்விகள் கேட்கிறார்கள் உங்களுடைய பதில் என்ன?” எனக் கேட்டபோது,

“என்னைப் பொறுத்தவரை ஒரு தயாரிப்பாளர் கொடுக்கும் கலெக்ஷனை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பொய்யை சொல்ல வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஏனென்றால் இப்போது நீங்கள் ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் சரி ஜவான் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து அவர்களது ஜெயிலர் படத்திற்கு கலெக்ஷன் போட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் அதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையான தகவலை பகிர்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களது நிறுவனம் ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனி அவர்கள் பொய்யாக ஒன்றை சொல்லி தப்பிக்க முடியாது. அவர்கள் நாளை எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டும் பங்குதாரர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் வரி செலுத்துவதற்கு பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் வெளிப்படையாக சோசியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறீர்கள். அப்படி ஒருவர் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு பதிவிடுகிறார்கள் என்றால்… இப்போது லியோ திரைப்படத்திற்கு 148.75 கோடிகள் முதல் நாளில் வசூலித்து இருக்கிறது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கிறது என்றால் அதுதான் உண்மை அதை நீங்கள் உண்மையா பொய்யா என கேள்வி கேட்க முடியாது. அது அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது அப்படி அதிகாரப்பூர்வமாக வெளியிடாத வரையில் எல்லாமே கெஸ்ட்டிமேட்ஸ் தான்.”

என பதிலளித்து இருக்கிறார். இன்னும் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் இந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.