தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் 2வது முறை தளபதி விஜய் இணைந்திருக்கும் லியோ திரைப்படம் மிரட்டலான ஆக்சன் திரைப்படமாக வெளிவர இருக்கிறது. கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் 500 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்திருக்கும் நிலையில் லியோ திரைப்படம் அதைவிட பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின் தளபதி விஜய் உடன் லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத் ஆக்சன் கிங் அர்ஜுனனின் கதாபாத்திரங்களான ஆண்டனி தாஸ் , ஹெரால்டு தாஸ் சகோதரர்களுடன் மற்றொரு சகோதரராக லியோ தாஸ் என்ற கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்திருக்கிறார் என தெரிகிறது. முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் லியோ திரைப்படம் குறித்தும் இசை வெளியீட்டு விழா ரத்து செய்தது குறித்தும் சில முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் பேசியபோது, “வாரிசு இசை வெளியீட்டு விழாவிலேயே நிறைய பிரச்சனை இருந்தது. வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் வந்துவிட்டார்கள் 6000 பேர் என்றால் 8000 - 10000 பேருக்கு மேல் வந்துவிட்டார்கள் அதுவே பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. தள்ளுமுள்ளுகளுக்கு பிறகு தான் அந்த விழா நடைபெற்றது. வாரிசு படத்திற்கு பிறகு தளபதி விஜய் மீதான கிரேஸ் குறிப்பாக லியோ திரைப்படத்திற்கு இன்னும் அதிகமாக இருப்பதால் இந்த கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்றே அவர்களுக்கு தெரியவில்லை அப்படி இருக்கும் போது இல்லை பார்த்துக் கொள்ளலாம் நான் செய்து விடுகிறேன் என எதையாவது செய்தால் அது கண்டிப்பாக விஜய் சாரை காயப்படுத்தி விடும் எப்படி இப்போது ஏ.ஆர்.ரகுமான் சாரை காயப்படுத்தி கொண்டு இருக்கிறதோ அது மாதிரி... மேலும் படத்தின் மீதான ஒரு நெகட்டிவான எண்ணத்தை உருவாக்கி விடும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் இப்போது இருக்கும் இந்த எதிர்பார்ப்பிலேயே படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்ற எண்ணத்திற்கு அவர்கள் வந்து விட்டார்கள்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.