எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தளபதி விஜய் இரண்டாவது முறையாக இணைந்து இருக்கும் இந்த லியோ திரைப்படம் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் ட்ரெய்லர் மற்றும் இதர அப்டேட்கள் எப்போது என தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. இதனிடையே சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிலையில், லியோ திரைப்படத்திற்கு 5 மணி சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கப்படுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கான நிலை குறித்து பேசி இருக்கிறார். அப்படி பேசுகையில்,

“இப்போது தயாரிப்பாளர் லலித் குமார் சார் கேட்டுக் கொண்டிருக்கிறார் எப்படியாவது எங்களுக்கு ஸ்பெஷல் காட்சி அனுமதி கொடுங்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார் அதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த படத்திற்கு மட்டும் எப்படி கொடுப்பார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது. ஏன் இந்த படத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து பண்ண வேண்டும்? இது மாதிரி நிறைய கேள்விகள் இருக்கிறது அல்லவா..? இதற்கு அரசாங்கம் சரியான ஒரு முடிவு எடுத்தார்கள் என்றால் நன்றாக இருக்கும். என்னுடைய கோரிக்கை நான் நிறைய தடவை சொல்லி இருக்கிறேன் அசோசியேஷன் மூலமாக அரசாங்கத்துடவும் கேட்டிருக்கிறோம். இது மாதிரி பெரிய பட்ஜெட் படங்கள் வரும் போது நிறைய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டாம் கொஞ்சம் ஃப்ரீயாக விடுங்கள் 5 மணி காட்சியிலிருந்து சில விஷயங்களை விடுங்கள் அது ஒரு கொண்டாட்டம் எத்தனை படங்கள் அந்த மாதிரி வருடத்திற்கு ரிலீஸ் ஆகின்றன. வருடத்திற்கு ஐந்து படங்கள் கூட வராது 5 லிருந்து ஏழு படங்கள் வரும். இதற்கு என்ன பெரிய பஞ்சாயத்து அந்த படங்கள் வந்துவிட்டு போகட்டுமே மீதி எல்லா படங்களுக்கும் 5 மணி காட்சிக்கு எல்லோரும் வரப் போவதுமில்லை அதை போட்டு பெரிய பிரயோஜனமும் இல்லை. 9 மணி காட்சியே அதிகம் அப்படி 9 மணி காட்சிக்கு வர வேண்டும் என்றால் தீவிர ரசிகர்கள் தான் வருவார்கள் 11:30 மணி காட்சிக்கு சினிமா ரசிகர்கள் எல்லாம் வருவார்கள். அதுதான் சினிமா. அரசாங்கம் இந்த விதியை உடைக்க போகிறார்களா? இல்லையா? என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இதை அரசியல் பண்ணுவதற்கு ஊடகங்களில் நிறைய பேர் இருக்கிறார்கள். சோசியல் மீடியாவில் இதை வைத்து அரசியல் பேசுவார்கள். ஏனென்றால் அவர் அரசியலுக்கு வர போகிறார் அதனால் அவரை வைத்து அரசியல் பேசினால் நாமும் பேசப்படக்கூடிய ஒரு இடத்தில் இருப்போம் என்பதால் நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால் உண்மை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.“

என தெரிவித்துள்ளார். மேலும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.