தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகராகவும் இந்திய திரையுலகில் பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகவும் திகழும் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக கடந்த 2023 ஜனவரி மாதம் வெளிவந்த துணிவு திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்ததாக அஜித்குமாரின் திரை பயணத்தில் 62 ஆவது திரைப்படமாக தயாராகும் AK62 திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில் கடந்த மே 1 அஜித் குமாரின் பிறந்தநாளில் AK62 படமான விடாமுயற்சி படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இதர அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த முன்னணி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், அஜித் குமார் அவர்களின் படம் ஆரம்பித்தார்கள்.. விடாமுயற்சி டைட்டில் அறிவித்தார்கள்.. எப்போது படப்பிடிப்பு எந்த அப்டேட்டும் இல்லையே என ரசிகர்கள் காத்திருக்கிறார்களே? என கேட்டபோது, "அது ஏதோ சில பல சங்கடங்கள் இருக்கிறது. அந்த தயாரிப்பு நிறுவனத்தில் தான் பிரச்சனையே தவிர, அஜித்குமாரிடமோ அல்லது இயக்குனர் மகிழ் திருமேனியிடமோ பிரச்சனை இல்லை. அவர்களுக்கு வருமான வரி சோதனை நடைபெற்றது. ஏதோ கணக்குகள் முடிக்கப்பட்டது என ஏதோ சொல்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காத போது இது குறித்து நாம் பேச முடியாது. அவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது என்றால், அவர்கள் உடனடியாக மறுபுறம் வியாபாரத்தை தொடங்க முடியாது. அதாவது நான் சொல்வது தயாரிப்பை ஆரம்பிக்க முடியாது. எப்படி தயாரிக்க முடியும் தினசரி செலவே 50 லட்ச ரூபாய் வரும். வங்கி கணக்கு முடக்கப்பட்டிருந்தால் எங்கிருந்து கொடுப்பது. எனக்குத் தெரிந்து விரைவில் அதிலிருந்து வெளிவந்து படப்பிடிப்பை தொடங்குவார்கள் என நினைக்கிறேன். இப்போதைக்கு எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்றால் ஜூலை மாதத்தில் படப்படிடிப்பு தொடங்கி விடும். முதல் வாரத்திலோ இரண்டாவது வாரத்திலோ கிடையாது. ஆனால் கட்டாயமாக ஜூலை மாதத்தில் ஆரம்பித்து விடும். அதற்குள் இந்த பிரச்சனைகளை எல்லாம் லைகா முடித்து விடுவார்கள் என சொல்கிறார்கள். காத்திருந்து பார்ப்போம். ஏனென்றால் அஜித் குமார் சாரும் காத்துக் கொண்டிருக்கிறார் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் நாம் போகலாம் என்று, அதற்கான எல்லா லொகேஷன்களும் பார்க்கப்பட்டுவிட்டது. திட்டங்கள் எல்லாம் தயாராக இருக்கின்றன. அவர்கள் காத்திருப்பது எப்போது லைகா படப்பிடிப்பை ஆரம்பிக்க சொல்வார்கள் என்பதற்காக தான். ஏனென்றால் படத்தை மகிழ் திருமணி அவர்கள் தொடர்ச்சியாக படம் பிடிக்க தான் திட்டமிட்டு இருக்கிறார். அஜித் குமாரும் அதற்கு தகுந்த மாதிரிதான் தேதிகளை கொடுத்திருக்கிறார்.

என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.