தமிழ்நாடு சேலம் மாவட்டம் சின்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் கடந்த 2015ம் ஆண்டில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். அதன்பின் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் 2017ல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவனம் ஈர்த்தார். தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களை அசாத்திய வேகத்தில் பந்து வீசி ஆச்சர்யப்படுத்தினார் நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராசன் ‘யார்க்கர்’ பந்து வீசுவதில் தனித்து தெரிந்து வல்லவராக பெயர் பெற்றார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நடராஜன் 2020 ல் ஆஸ்திரேலியா சுற்றுபயணத்தில் ஒரு நாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய பிரிவில் இந்திய அணியில் இடம் பெற்றார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி தமிழ்நாடு மாநிலத்தின் பெருமைக்குரியவராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா வரும் ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தொடக்க விழாவின் அழைப்பிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதனுடன் “எனது கனவு திட்டமான ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ தொடக்க விழாவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், சென்னை சூப்பர் கிங்க்ஸ் சிஇஒ விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த சிறப்பு விருந்தினர் வரிசையில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு அவர்களும் இடம் பெற்றுள்ளார். நடிகர் யோகி பாபு கிரிக்கெட் விளையாட்டினை நன்றாகவே விளையாடுபவர் அவ்வப்போது தல தோனி அவர்களிடம் இருந்து கிரிக்கெட் பேட் பரிசாக பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிரிக்கெட் வீரன் நடராஜன் அவர்களை பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.