4 ஆம் வகுப்பு மாணவியை வகுப்பறையிலேயே சக மாணவர்கள் சேர்ந்து கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சாரணர் இயக்க வகுப்பு நடந்துள்ளது. அப்போது, சாரணர் இயக்க வகுப்பு எடுத்த ஆசிரியரை, தலைமை ஆசிரியர் அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த வகுப்பில் உள்ள ஒரு மாணவியிடம், வகுப்பறையைப் பார்த்துக்கொள்ளும் மாறு கூறிவிட்டு, ஆசிரியர் சென்றுவிட்டார்.

வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததால், 3 மாணவர்கள் அரட்டை அடித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். பின்னர், ஆசிரியர் வந்ததும், வகுப்பறையில் விளையாடிய 3 மாணவர்கள் குறித்து, அந்த மாணவி புகார் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 3 மாணவர்களும், ஆசிரியர் வகுப்பை முடித்துவிட்டுச் சென்றதும், அந்த மாணவியை சராமறியாக அடித்து கடுமையாகத் தாக்கி உள்ளனர்.இதில், அந்த மாணவிக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த மாணவியின் கண் அருகில் பலத்த காயம் ஏற்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பள்ளியில் சக மாணவர்களால் மாணவி தாக்கப்பட்டது குறித்து, போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாகப் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். இதனிடையே, பள்ளி வகுப்பறையிலேயே, ஒரு மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.