தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் சீயான் விக்ரம் தங்கலான் திரைப்படத்தின் ஒத்திகையின் போது பலத்த காயமடைந்துள்ளார். முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த சீயான் விக்ரம், ஆதித்த கரிகாலனின் கதாபாத்திரத்தில் வேறு யாரும் இந்த அளவிற்கு நடிக்க முடியாது என சொல்லும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் மிரள வைத்திருக்கிறார். முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கிறது. அனேகமாக இந்த ஆண்டில்(2022) துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் நடித்து வருகிறார். தங்கலான் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்து எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரமின் மிரட்டலான புதிய அவதாரம் பார்த்தவுடனே அனைவரையும் கவர்ந்தது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்க, இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் தங்கலான் திரைப்படம் 1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தங்கலான் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சீயான் விக்ரம் அவர்களின் பிறந்தநாளில் வெளிவந்த தங்கலான் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், தங்கலான் திரைப்படத்தின் ஒத்துகையின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சீயான் விக்ரமுக்கு விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது சீயான் விக்ரம் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கு தங்கலான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளமாட்டார் எனவும் சீயான் விகரம் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த சீயான் விக்ரம் வெகு விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர வேண்டும் என கலாட்டா குழுமம் வேண்டிக்கொள்கிறது. சீயான் விக்ரம் அவர்களுக்கு தங்கலான் திரைப்படத்தின் ஒத்திகையின் போது ஏற்பட்ட காயம் குறித்து, சீயான் விக்ரம் அவர்களின் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை இதோ…