இந்திய திரையுலகில் நேர்த்தியான மற்றும் நுணுக்கமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் சியான் விக்ரம். பல ஆண்டுகளாக ரசிகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து முன்னணி நடிகராய் வலம் வரும் சியான் விக்ரம் நடிப்பில் முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவு பேசப்பட்டது. ஆதித்ய கரிகாலனாக இந்திய அளவு ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார் நடிகர் சியான் விக்ரம். பிரம்மாண்ட வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். 1800 காலக் கட்டத்தில் கோலார் தங்க வயல் கதைகளத்தை சார்ந்து உருவாகும் இப்படத்தில் சியான் விக்ரம் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து முன்னதாக வெளியான முன்னோட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தங்கலான் திரைப்படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதனிடயே சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி நீண்ட நாள் ரிலீஸுக்கு காத்திருக்கும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. கடந்த 2016ம் ஆண்டு உருவான இப்படத்திற்கு ரசிகர்களிடையே தனி ஆவல் உருவாகி இருந்தது. பல்வேறு காரணங்களினால் இப்படத்தின் வெளியீடு தள்ளி போய் வந்தது. அதன் பின் ஆறு ஆண்டு கழித்து தற்போது இயக்குனர் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட முன் வந்துள்ளார்.

ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இவர்களுடன் இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் முன்னதாக படத்தின் முதல் பாடல் வெளியாகி தனி வரவேற்பை பெற்று இன்றும் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இறுதிகட்ட பட வேலையில் இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடவுள்ளனர். “ஹிஸ் நேம் இஸ் ஜான்” என்ற பாடல் வரும் ஜூலை 19ம் தேதி வெளியாகவும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரை வரிகளில் உருவான இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு மேலும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இரண்டாவது பாடலின் புரோமோவை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி கௌதம் மேனன் பகிர்ந் புரோமோ அப்டேட்டில் நாளை காலை 11 மணியளவில் ஹிஸ் நேம் இஸ் ஜான் என்ற பாடலின் புரோமோ வெளியாகவுள்ளது. தற்போது இயக்குனர் கௌதம் மேனன் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.