தமிழ் திரை உலகின் ஆகச் சிறந்த நடிகராக தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து கோப்ரா வரும் ஆகஸ்ட் 11-ம் தேதியும், பொன்னியின் செல்வன் பாகம் 1 வருகிற செப்டம்பர் 30-ம் தேதியும் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளன.

இதனிடையே இன்று ஜூலை 8-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சீயான் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானது. மேலும் சீயான் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

இதனையடுத்து சீயான் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அன்பான ரசிகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும்… அப்பாவிற்கு நெஞ்சில் லேசான அசௌகரியம் ஏற்பட்டதன் காரணமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறான தகவல். இந்த வதந்தி எங்களை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. சீயான் நலமுடன் இருக்கிறார். ஒரு நாளில் அவர் வீடு திரும்ப உள்ளார். எனவே தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்" என வதந்திகளுக்கு விளக்கமளித்து பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், விக்ரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை சீயான் விக்ரமின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "பிரபலமான தமிழ் நடிகர் திரு.விக்ரம் அவர்கள் காவேரி மருத்துவமனையில் நெஞ்சில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். எங்களது சிறப்பு நிபுணர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. தற்போது நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார். விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீயான் விக்ரமின் தற்போதைய உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை இதோ…

A statement on #ChiyaanVikram's health from Kauvery hospital. pic.twitter.com/SOp67eisv4

— Yuvraaj (@proyuvraaj) July 8, 2022