சிறுமியைக் கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த பானுப்பிரியா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பானுப்பிரியா வீட்டில் வேலை செய்த ஆந்திராவைச் சேர்ந்த 14 வயது சிறுமி, பணம் மற்றும் நகைகளைத் திருடியாகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், சிறுமியையும் அவரது தாயார் பிரபாவதியையும் போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

இதனையடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த அந்த மாணவியின் தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில், நடிகை பானுப்பிரியா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக, தனது 14 வயது மகளை நடிகை பானுப்பிரியா அழைத்துச் சென்றதாகவும், ஆனால், வேலைப் பார்த்த 18 மாதங்களும் அவர்கள் சம்பளம் கொடுக்க வில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.

குறிப்பாக, பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன், சிறுமியை பாலியல் ரீதியாக அடித்துத் துன்புறுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார். சிறுமியின் தாயர் பிரபாவதியின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் முன்பு சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், 14 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்திக் கொடுமைப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.

இதனால், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சென்னையில் வசிப்பதால், இந்த வழக்கின் கோப்புகளை ஆந்திரா போலீசார், சென்னை பாண்டிபஜார் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி நடிகை பானுப்பிரியா, அவரது கணவர் மற்றும் பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.