சென்னையில் நடந்த என்கவுண்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

விழுப்புரம் மாவட்டம் குயிலாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 28 வழக்குகள் உள்ளன. இது தவிர கூலிப்படை வைத்து கொலை செய்வதும், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதும், கஞ்சா விற்பனை செய்வதும், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதும் என சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த முக்கிய காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் ரவுடி மணிகண்டன் பெயர் அடிப்பட்டது. இது தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர். அது முதல் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

இதனையடுத்து, சமீபத்தில் குடும்பத்துடன் சென்னை கொரட்டூருக்கு குடிபெயர்ந்து வசித்து வந்தார். மேலும், அவர், முக்கிய பிரமுகர் ஒருவருக்கு குறிவைத்துள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ரவுடி மணிகண்டனை கைது செய்யும் நோக்கத்துடன் விழுப்புரத்திலிருந்து நேற்று மாலை சென்னை கொரட்டூருக்கு வந்த தனிப்படை போலீசார், அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றி வளைத்தனர்.

அப்போது, போலீசார் மணிகண்டனை கைது செய்ய முயன்றதாகத் தெரிகிறது. ஆனால், அதற்குள் அவர் போலீசாரை கத்தியால் தாக்க முற்பட்டதாகவும், அதனால், தற்காப்பு நடவடிக்கைக்காக ரவுடி மணிகண்டனை போலீசார் சுட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 2 தோட்டாக்கள் மணிகண்டன் நெஞ்சில் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அப்போது, மணிகண்டனுடன் இருந்த அவரது கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தின்போது, உதவி ஆய்வாளர் பிரபு படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கடந்த 100 நாட்களில் சென்னையில் இது 2 வது என்கவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.