சென்னையில் ரத்தம் சொட்டச் சொட்ட இளைஞர் ஒருவர் ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மதுரை செல்லும் பாண்டியன் அதிவிரைவு ரயில் நின்றுகொண்டிருந்தது. அப்போது, 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் ரத்தம் சொட்டச் சொட்ட வழிந்த நிலையில் கூச்சலிட்டபடியே அங்கு வந்தார்.

ரயில் அருகில் வந்ததும், திடீரென்று ரயிலின் மேற்கூரையில் ஏறி, கத்திக்கொண்டே அங்கிருந்த ரயிலின் உயரழுத்த மின் கம்பியைப் பிடிக்க முயன்றார்.

இதனால், அங்கிருந்தவர்கள் கடும் பீதியடைந்தனர். இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அவரை கீழே இறங்கி வரும்படி சத்தமிட்டனர். இதனிடையே, ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்து, அந்த இளைஞருடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அந்த இளைஞரும், ரயிலின் மேற்கூரையில் நின்றபடி, தனது கோரிக்கையை அந்த போலீசாரிடம் தெரிவித்தார். அதனை போலீசார் ஏற்றுக்கொண்டதையடுத்து, ரயிலின் மேற்கூரையிலிருந்து அவர் கீழே இறங்கி வந்தார். இதனையடுத்து, ரத்த காயங்களுடன் தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞரை மீட்ட போலீசார், அருகில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.