உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்மொழி தான் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில், பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஐ.ஐ.டி. மாணவர்களுக்குப் பட்டங்களையும், இந்தியா - சிங்கப்பூர் ஹெக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து மாணவர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இளைஞர்களின் கண்களில் ஒளியைக் காண்கிறேன் என்று தெரிவித்தார்.

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்றும், தமிழ் மொழியைப் போற்றுவோம் என்றும் குறிப்பிட்ட அவர், உலகத்திலேயே மிகப்பழமையான மொழியைக் கொண்ட மாநிலம் தமிழகம் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், சென்னை மிகச்சிறந்த கலாச்சாரம், மாபெரும் பாரம்பரியம், சிறந்த உணவு வகைகளைக் கொண்டது என்றும், மாமல்லபுரம் மிகச்சிறந்த தொன்மையான சிற்பங்களைக் கொண்ட நகரம் என்றும் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருவதாகவும் கூறினார். குறிப்பாக, இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கையைக் கண்டு உலகம் வியந்து பார்க்கிறது என்றும், இளைஞர்கள் சிறந்த மாணவர்களாக மட்டுமில்லாமல், சிறந்த குடிமகனாகவும் திகழ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், எதிர்கால இந்தியாவின் கனவுகளை இளைஞர்களாகிய உங்கள் கண்களில் பார்க்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், இந்திய இளைய தலைமுறையினரின் நம்பிக்கையைக் கண்டு உலகத் தலைவர்கள் எல்லாம் பிரமித்துப்போய் உள்ளார்கள் என்றும், அந்த திறமைக்குப் பின்னால் சென்னை ஐ.ஐ.டி. இருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமையோடு நினைவு கூர்ந்தார்.