மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

சென்னை முகலிவாக்கம் சுபஸ்ரீ நகரைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவன் தீனா, நேற்று முன்தினம் இரவு வாய்பேச முடியாத தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு நடந்து சென்றுள்ளார்.

அப்போது, தனம் நகர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் தோண்டிய பள்ளத்தில், பூமிக்கு அடியில் தெரு விளக்குகளுக்காகப் புதைக்கப்பட்டு இருந்த மின்சார கேபிளை மீண்டும் சரிவர மூடாமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மின்சார கேபிள் வெளியே தெரிந்தபடி இருந்த நிலையில், அதில் மழை பெய்து, நீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில், இதைத் தெரியாமல் அதன் மீது நடந்து சென்ற மாணவன் தீனாவை, நொடி பொழுதில் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில், சுருண்டு விழுந்து மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற வாய் பேச முடியாத அவரது நண்பர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தீனா இறந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த வாய் பேச முடியாத அவனது நண்பன், அந்த வழியாகச் சென்றவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. இதனையடுத்து, தீனாவின் பெற்றோரிடம் சென்று கூறியுள்ளார். பின்னர், அங்கு வந்து எல்லோரும் பார்த்தபோது, மின்சாரம் தாக்கி தீனா உயிரிழந்தது தெரியவந்தது.

இது தொடர்பாகச் சிறுவனின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், விரைந்து வந்த போலீசார், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அனைவரையும் கலைந்துபோகச் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு மாங்காடு செய்த போலீசார், ஆலந்தூர் உதவிப் பொறியாளர் செந்தில், உதவி செயற்பொறியாளர் பாலு ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சிறுவன் தீனா மின்சாரம் தாக்கி இறந்து கிடக்கும் நிலையில், அவனைக் காப்பாற்ற வாய்பேச முடியாத அவனது நண்பன், பொதுமக்களிடம் உதவி கேட்டுப் போராடும் காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது வைரலாகி வருகிறது.