கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை சப்ளை செய்த 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் வரும் 11 ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்கள். இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 5 பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை செய்தனர்.அப்போது, அந்த அறையிலிருந்தது சுமார் 420 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, 5 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இந்த மாத்திரைகள் அனைத்தும், பிரசவ நேரத்தில் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் என்றும், இவற்றைப் போதைக்காக கல்லூரி மாணவர்களிடம் விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. குறிப்பாக, கைது செய்யப்பட்ட சிலர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மாத்திரைகள் அனைத்தும் யார் மூலம் இவர்களுக்கு வந்தது, இவர்கள் எங்கெல்லாம் சென்று இவற்றை விற்பனை செய்வார்கள் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.