இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுத நிலையில், பிரதமர் மோடி கட்டியணைத்துத் தேற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லேண்டர் விக்ரமிடமிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், இஸ்ரோ தலைவர் சிவன் உட்பட, விஞ்ஞானிகள் அனைவரும் கலக்கமடைந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், 'விக்ரம் 'லேண்டர்' உடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் துண்டிக்கப்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

மேலும், இது குறித்துத் தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது என்றும், தகவல் துண்டிக்கப்பட்டதற்கான காரணத்தை முழுமையாக ஆராய்ந்த பிறகே விவரங்களைக் கூற இயலும் என்றும் அவர் கூறினார். இதனிடையே, 'லேண்டர்' கருவி, நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் காணப் பிரதமர் மோடியும் அங்கு வருகை தந்திருந்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பிறகு, பிரதமர் மோடியைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், அவர் முன்பு கண்ணீர் விட்டு அழுதார். இதனையடுத்து, பிரதமர் மோடி அவரை கட்டியணைத்துத் தேற்றினார். அந்த நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்ததது.

அத்துடன், சிக்னல் துண்டிக்கப்பட்டதால் 'விஞ்ஞானிகள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும், தைரியமாக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்குப் பிரமர் மோடி நம்பிக்கையூட்டி, ஆறுதல் கூறினார்.