விஞ்ஞானத்தில் தோல்வி என்பதே இல்லை என்று விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார்.

சந்திரயான் 2 விண்கலத்தின், 'லேண்டர்' கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இன்று காலை பெங்களூரு இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். “பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கத்துடன் தனது உரையைப் பிரதமர் மோடி தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இஸ்ரோவின் பணிகள் நாட்டையே பெருமையடையச் செய்கிறது. தாய் நாட்டின் கனவுகளை நினைவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். நமது விண்வெளி திட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கிறது.

சந்திராயன்-2 திட்டத்துக்காகப் பல நாட்கள் தூங்காமல் இஸ்ரோ விஞ்ஞானிகள் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஏமாற்றத்தை உணர்ந்துள்ளேன். நாட்டிற்காக இரவு பகல் பார்க்காமல் விஞ்ஞானிகள் உழைத்து வருகிறார்கள். அவர்களது மன தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.

புதிய விடியல் நமக்காகக் காத்திருக்கிறது. விஞ்ஞானத்தில் தோல்வி என்பதே இல்லை. நான் உங்களுடன் இருக்கிறேன். கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமல்ல. நிச்சயம் நிலவைத் தொடும் முயற்சி வெற்றி அடையும்” என்றுவிஞ்ஞானிகளுக்கு நம்மிக்கையூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசினார்.