இயக்குனர் பி.வாசு அவர்களின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டான ஒரு திரைப்படம் தற்போதைய ட்ரெண்டிங் சினிமாவில் பல ஹாரர் காமெடி திரைப்படங்கள் வருவதற்கு மிக முக்கிய காரணமே இந்த சந்திரமுகி திரைப்படம் தான் என சொல்லலாம். அந்த அளவிற்கு மக்களின் மனதை வென்ற இந்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக சந்திரமுகி 2 திரைப்படத்தையும் இயக்குனர் பி.வாசு அவர்கள் உருவாக்கி இருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க, நடிகர் ராகவா லாரன்ஸ் & பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி வெளியீடாக வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி சந்திரமுகி 2 படம் ரிலீஸ் ஆகிறது

இந்த நிலையில் இயக்குனர் பி.வாசு அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வேட்டையின் கதாபாத்திரத்தில் வரும்போது கொடுக்கும் "லக்க லக்க லக்க" சத்தத்தின் பின்னணியை குறித்து கேட்டபோது, “ரஜினி சார் சில சமயங்களில் இமயமலைக்கு சென்று வருவது குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொள்வார். எப்போதும் இமயமலை சென்றால் என்ன செய்வார் எங்கெங்கே போவார் என சொல்லுவார் இந்த வேட்டையன் கதாபாத்திரம் குறித்தும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், "இமயமலையில் தியானம் செய்வதற்காக ஒரு சில இடங்களில் உட்கார்ந்து இருப்பேன் அப்போது மிகவும் விசித்திரமான ஒரு குரல் எனக்கு கேட்டது" என்று சொன்னார். "லக்க லக்க லக்க" என்று அந்த சத்தத்தை செய்து காட்டினார். யாரோ ஒரு சித்தர் ஒருவர் அவருடைய சத்தம்… நான் ஏற்கனவே வேட்டையன் கதாபாத்திரத்திற்கு அவர் நடந்து வரும் ஷூ சத்தத்தை வைத்து ஒரு திட்டம் வைத்திருந்தேன். அந்த ஷூ சத்தம் கேட்டாலே வேட்டையன் தான் வருகிறார். எப்படி சலங்கை சத்தம் கேட்டால் சந்திரமுகி அது மாதிரி ஷூ சத்தம் கேட்டால் வேட்டையன் என திட்டம் வைத்திருந்தேன். அதோடு சேர்ந்து இந்த “லக்க லக்க” சேர்ந்தால் எப்படி இருக்கும் என அவரிடம் கேட்டேன். பின்னர் ஒரு நாள் எனக்கு ஃபோன் செய்து அழைத்தார். நான் அவரது வீட்டிற்கு சென்றேன். சென்றதும் என்னை கொஞ்சம் தூரத்தில் நிற்க வைத்துவிட்டு என்னை விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி நடந்து திரும்பும் போது வேட்டையனாக திரும்பினார். உடலை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு அந்த வேட்டையன் கதாபாத்திரத்தில் “லக்க லக்க லக்க” என சொல்லிக்கொண்டு நடந்து வந்தார். அடுத்த நிமிடமே நான் அவரை கட்டி பிடித்துக் கொண்டேன். “சார் பாட்ஷா மாதிரி ஆகிவிடும் சார் ஒரு தடவை சொன்னால் 100 தடவை சொன்ன மாதிரி ஆகிவிடும்” என்றேன்.” என தெரிவித்தார் இன்னும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட பி.வாசு அவர்களின் முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.