வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் வழிப்பறி கொள்ளையர்கள் ஜெயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் அமுதா, வெளிப்பாளையும் பகுதியில் உள்ள தனது வீட்டு வாசலில் இன்று காலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக ஹெல்மெட் போட்டுக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அமுதாவின் அருகில் வந்து, அவரிடம் முகவரி கேட்பாவது போல் பேச்சுக் கொடுத்துக்கொண்டே, திடீரென்று அவரது கழுத்திலிருந்து ஜெயினை பறித்துள்ளனர். இதனால், பதறிப்போன அவர், கொள்ளையர்களுடன் மல்லுக்கட்டு உள்ளார்.

இதனால், கொள்ளையர்கள் அமுதாவை தாக்கிவிட்டு ஜெயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளையர்கள் பறித்துச்சென்றது 5 சவரன் தங்க ஜெயின் என்பது தெரியவந்தது.

மேலும், வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் அருகில் தனியாக நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடமும் 5 சவரன் செயினை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்தும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நாகையில் அடுத்தடுத்து நடைபெற்ற 2 கொள்ளைச் சம்பவங்கள், அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.