இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்தவர். 2006 ல் கேங்ஸ்டர் படம் மூலம் அறிமுகமாகி அதிகம் கவனம் பெற்றவர். தற்போது அவரை பின்தொடர ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே பல ஆண்டுகளாக உருவாக்கியுள்ளார்.

தமிழில் 2008 - ல் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் அறிமுகமான கங்கனா அதன் பின் 13 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவான 'தலைவி'படம் மூலம் ரீ - என்ட்ரி கொடுத்தார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக உருவாகிய தலைவி திரைப்படத்தில் கங்கனா வின் நடிப்பு அதிகம் பாராட்டப்பட்டது. இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை 'எமர்ஜென்ஸி' என்ற பெயரில் படமாக தயாரித்து இயக்கி நடித்தும் வருகிறார் கங்கனா ரனாவத்

பொதுவாகவே கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் அதிகம் ஈடுபாடு கொண்டவராய் இருப்பவர். பல முறை அவரது டிவிட்டர் கருத்துகள் வைரலானதுண்டு. கடந்த 2021 ம் ஆண்டு மேற்கு வங்க தேர்தல் குறித்து கருத்துக்களை பதிவிட்டார் கங்கனா. வழக்கத்தை மீறி அது சர்ச்சைக்குள்ளானது. அதன் காரணமாக 2021-ம் ஆண்டு மே மாதம் அவரது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதன்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டுமே பயன்படுத்தி அதில் தன் கருத்துக்களை தொடர்ந்தார்.

இந்நிலையில் ஒன்றரை ஆண்டுக்கு பின் தற்போது அவரது டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒன்றரை ஆண்டுகளாக டிவிட்டர் பக்கம் வராத கங்கனா அதிரடியாக ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர் "அனைவருக்கும் வணக்கம், மீண்டும் இங்கு வந்ததில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து கங்கனா ரனாவத் ரசிகர்கள் உற்சாகத்தில் அவரை வரவேற்று வருகின்றனர்.‌ மேலும்இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் உட்பட பல திரைப்பிரபலங்கள் அவரது கணக்கு மீண்டும் வந்ததற்கு மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் மகிழ்ச்சியை தெரிவித்து வந்தாலும் மீண்டும் கங்கனா ரனாவத் பக்கத்திலிருந்து சர்ச்சை பதிவுகள் வரக்கூடும் என்று சில ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்தும் வருகின்றனர்.