இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது அவர் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் இயக்குனர்களில் முன்னணியில் இருக்கின்றார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. நேர்த்தியான திரைக்கதையும் படமாக்கத்தையும் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது அவர் தளபதி விஜயுடன் இரண்டாவது முறையாக இணைந்து ‘லியோ படத்தில் பணியாற்றி வருகிறார். காஷ்மீரில் மும்முரமாக நடைபெற்று வரும் தளபதி விஜயின் லியோ படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பீஸ்ட் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்றுகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்பை நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்நிலையில் அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. லியோ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் சஞ்சய் தத் தற்போது காஷ்மீர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திறங்கியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் விஜயை சந்தித்து பேசிய தருணத்தை படக்குழு அட்டகாசமான வீடியோவாக தொகுத்து சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அந்த வீடியோ ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

சஞ்சய் தத் பாலிவுட் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான். சமீபத்தில் பல மொழிகளில் வில்லனாக மிரட்டி வருகிறார். குறிப்பாக கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். இந்திய அளவு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை தன் நடிப்பின் மூலம் மீண்டும் உருவாக்கி கொண்டார் நடிகர் சஞ்சய் தத். ஏற்கனவே படத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் இருக்கும் போது இவர்களுடன் சஞ்சய் தத் இணைந்துள்ளது ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.